சனல் 4 குழுவினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவருக்கு அமைச்சர் பட்டம் மட்டுமே எஞ்சியது!

Written by vinni   // December 28, 2013   //

chandrasenaஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விசேட திட்டங்கள் தொடர்பான அமைச்சராக எஸ்.எம். சந்திரசேனவை நியமித்த போதும் அவரது அமைச்சின் கீழ் எந்த நிறுவனங்களும் இல்லை என தெரியவருகிறது.

அமைச்சர் சந்திரசேனவின் அமைச்சுக்கான பொறுப்புகள் மற்றும் துறைகள் தொடர்பான இலக்கம் 1842/3 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 23 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அந்த வர்த்தமானி அறிவித்தலில் திணைக்களங்களோ, அரச கூட்டுத்தாபனங்களோ, அதிகாரமிக்க நிறுவனங்களோ அமைச்சர் சந்திரசேனவுக்கு ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பொதுநலவாய நாடுகளின் மாநாடு தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக இலங்கை வந்திருந்த கெலும் மக்ரே உள்ளிட்ட சனல் 4 குழுவினர் வடக்கு நோக்கி ரயிலில் புறப்பட்டுச் சென்ற போது அனுராதபுரம் ரயில் நிலையத்தில் வைத்து தடுக்கப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக ரெயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது. சனல் 4 ஊடக குழுவினருக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தை அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவே ஒழுங்கு செய்திருந்தார்.

இதனை பாராட்டும் வகையிலேயே அனுராதபுரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்தே சந்திரனேவுக்கு ஜனாதிபதி விசேட திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை பரிசளித்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

எவ்வாறாயினும் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் தொடர்புதுறை அமைச்சுக்கும் சிரேஷ்ட அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10 பேருக்கும் அரச நிறுவனங்களை எதனையும் ஜனாதிபதி வழங்கவில்லை என்பது நினைவுக்கூறத்தக்கது.

இவர்கள் அனைவரும் அமைச்சர்கள் என்ற பட்டத்தை வைத்து கொண்டு அதற்கான பாதுகாப்பு சிறப்புரிமைகள் உட்பட ஏனைய சுகபோகங்களை அனுபவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Similar posts

Comments are closed.