தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா

Written by vinni   // December 27, 2013   //

india-cricket-teamதென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி வலுவான நிலையில் உள்ளது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை பெற்றிருந்தது.
டர்பன் நகரில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். காயம் காரணமாக ஆட மாட்டார் என சொல்லப்பட்ட தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் மார்கல், அணியில் இடம்பெற்றிருந்தார்.

துவக்க வீரர்களாக களம் இறங்கிய தவான், விஜய் இருவருமே திறமையாக தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை எதிர் கொண்டனர். துரதிர்ஷ்டவசமாக, மார்கல் வீசிய பந்தில் தவான் 29 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 41 மட்டுமே.

பின்பு களமிறங்கிய புஜாரா, விஜயுடன் இணைந்து கச்சிதமாக சூழ்நிலையைப் புரிந்து விளையாட ஆரம்பித்தார். மறுமுனையில் முரளி விஜய்யும் பதற்றமின்று ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தார். உணவு இடைவேளைக்கு பின்னும் தென் ஆப்பிரிக்காவின் எந்த பந்து வீச்சாளரும் எடுபடாமல் போக 102 பந்துகளில் விஜய்யும், 97 பந்துகளில் புஜாராவும் அரை சதத்தைக் கடந்தனர்.

நேற்றைய முதல்நாள் ஆட்டம் முடியும் முன்னர் முரளி விஜய் சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் 29 ஓவர்கள் மீதமுள்ள நிலையிலேயே நேற்றைய ஆட்டம் முடிக்கப்பட்டது. இன்றைய ஆட்டம் முன்கூட்டியே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்ட நேர முடிவில் விஜய் 91 ஓட்டங்களுடனும், புஜாரா 58 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.


Similar posts

Comments are closed.