போக்குவரத்து கடமை இனிமேல் படையினருக்கு இல்லை?

Written by vinni   // December 27, 2013   //

policeயாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விநியோகம், மணற்கொள்ளை, மரக் கடத்தல் போன்ற சட்டவிரோத மற்றும் சடூகவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கும் பொலிஸாருக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இத்தகைய தொடர்பு காரணமாகவே சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் குறித்து பொலிஸாருக்கு பொதுமக்கள் இரகசிய தகவல் வழங்கினால் அது பகிரங்கப்படுத்தப்பட்டு விடுகிறது. இதனால் சட்டவிரோதிகளும் இலகுவில் தப்பித்துக் கொள்கின்றனர்.

மக்களும் தகவல் கொடுக்க அஞ்சுகின்றனர். இவ்வாறான நிலையில் பொலிஸார் – பொதுமக்கள் உறவும் மேலும் விரிசலடைகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

பொலிஸார் – பொதுமக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அமைச்சர் டக்களஸ் தேவனந்தா தலைமையில் நேற்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பொலிஸ் உயரதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெறுகின்ற சட்ட விரோத மற்றும் சமூக விரோத செயற்பாடுகள் தொடர்பாக பிரதேச செயலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பொலிஸ் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தனர்.

குறிப்பாக மணல் கொள்ளை, மரக் கடத்தல், கஞ்சா கடத்தல், மது போதையில் அட்டகாசம் விளைவித்தல் உள்ளிட்ட சட்டவிரோத சமூகவிரோத செயல்கள் தொடர்பாகவே பலராலும் அதிகளவு குற்றச்சாட்டுக்க முன்வைக்கப்பட்டன.

இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

பொலிஸார் மீது பொதுமக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். பொலிஸாரும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு நம்பிக்கை வைத்தாலே பாதியளவு சட்டவிரோத செயற்பாடுகள் குறிந்துவிடும் எனவும் இக்கலந்துரையாடலில் பங்கேற்ற அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

போக்குவரத்து கடமை இனிமேல் படையினருக்கு இல்லை?

யாழ்பாணத்தில் வீதிப் போக்குவரத்துக் கடமையில் இராணுவத்தினர் ஈடுபடுவது தடுக்கப்படும். பொலிஸாரே இந்தப் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்தப்படுவார்கள் என வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் உறுதியளித்துள்ளார்.

யாழ்பாணத்தில் போக்குவரத்துப் பொலிஸாருக்குரிய வேலையை அதிகளவில் இராணுவத்தினரே பார்த்து வருகின்றனர். வீதிகளில் வாகனங்களை மறித்து சோதனையிடுவது முதல் ஆவணங்களை சோதிப்பது வரையான இராணுவத்தினரின் செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுகிறது.

எனவே இதனைத் தடுத்து பொலிஸாரை இந்தக் கடமையில் ஈடுபடுத்த வேண்டுமென யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று பொலிஸார், அரச அதிகாரிகள், மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக யாழ்.நகரை அண்மித்த ஓட்டுமடம் மற்றும் நாயண்மார்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் படையினர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்தே போக்குவரத்து கடமைகளில் இனிமேல் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். பொலிஸார் முழுமையாக கடமையில் அமர்த்தப்படுவார்கள் என வட பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் உறுதியளித்தார்.


Similar posts

Comments are closed.