கூட்டமைப்பின் தீர்மானத்தை வரவேற்கின்றனர் வடக்கு, கிழக்கு ஆயர்கள்

Written by vinni   // December 26, 2013   //

TNA-logoஇலங்கை அரசுடன் இப்போதைக்கு பேச்சு நடத்துவதற்கு தயாரில்லை என்றும், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்கமாட்டோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்கிறோம்.’
ஜெனிவாவை இலக்கு வைத்து ஜனாதிபதி மஹிந்த வெட்டிய குழிக்குள் கண்ணை மூடிக்கொண்டு போய் விழாமல் கூட்டமைப்பினர் தப்பிவிட்டனர் என்று வடக்கு, கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள், தெரிவித்தனர்.

இது குறித்து வடக்கு, கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் வெளியிட்ட கருத்துக்கள்-
மட்டக்களப்பு அம்பாறை ஆயர் பொன்னையா:-
‘ஏமாற்றத்தை முன்கூட்டியே அறிந்து இலங்கை அரசுடன் இப்போதைக்கு பேச்சில்லை என்றும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கமாட்டோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு உறுப்பினர்கள் சம்பந்தன் எம்.பியின் தலைமையில் வவுனியாவில் எடுத்த தீர்மானத்தை வரவேற்கின்றேன்.
இந்த முடிவு தமிழினத்தின் நலனைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு உறுப்பினர்கள் அனைவரும் தொடர்ந்து ஒன்றுபட்டு இவ்வாறான தீர்மானங்களை எடுத்தால் அரசின் சதி வலைக்குள் விழாமல் இருக்கமுடியும்.

தமிழர்களைப் புறந்தள்ளி அவர்களின் இருப்பிடங்களை ஆக்கிரமித்து அவர்களின் கருத்துகளுக்கும் சர்வதேச சமூகத்தின் அறிவுரைகளுக்கும் செவிசாய்க்காமல் தன்னிச்சையாக செயற்பட்டு வரும் இலங்கை அரசு, நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு திருந்தவேண்டும். அப்போதுதான் இந்த அரசில் தமிழர்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் நம்பிக்கை ஏற்படும்; தமிழர்களின் பிரதி நிதிகளான கூட்டமைப்பும் அரசுடன் பேச முன்வரும்.’
மன்னார் ஆயர் இராயப்பு
‘நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண அரசுடன் கைகோர்க்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும், கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் கடந்த வாரம் ஜனா திபதி மஹிந்த ராஜபகக்ஸ அழைப்பு விடுத்திருந்தார்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மாநாடு நடைபெறவுள்ள நிலையில், சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக ஒரு நாடகத்தை இலங்கையில் அரங்கேற்றும் வகையிலேயே கூட்டமைப்பினருக்கு ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்திருந்தார். இதனைக் கூட்டமைப்பினர் தமது தீர்மானத்தால் அம்பலப்படுத்தியுள்ளனர்.

ஜெனிவாவை இலக்குவைத்து ஜனாதிபதி மஹிந்த வெட்டிய குழிக்குள் கண்ணை மூடிக்கொண்டுபோய் விழாமல் கூட்டமைப்பினர் தப்பிவிட்டனர். சம்பந்தனும், விக்னேஸ்வரனும் படித்தவர்கள்; ஆளுமைமிக்கவர்கள். இதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.