அவுஸ்திரேலியாவின் புதிய சட்டம்

Written by vinni   // December 26, 2013   //

Campusஅவுஸ்திரேலியாவில் மாணவர்கள் குண்டாவதை தவிர்க்க புதிய சட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு மற்றும் இளம் வயதில் ஏற்படும் நீரிழிவு நோய்க்கான காரணங்கள் குறித்த ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையில், பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் அதிக நேரம் அமர்ந்த வண்ணம் பாடங்களை கற்பதால் அவர்களுக்கு உடல் எடை அதிகரித்து, நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்று மாணவர்கள் நின்ற வண்ணம் பாடம் கற்கும் வகையில் வகுப்பறையை அமைத்துள்ளது.

இதுகுறித்து பள்ளி நிர்வாக அதிகாரி கூறுகையில், மாணவர்களுக்கு உயரத்தை அதிகரித்தும், குறைத்தும் பயன்படுத்தும் வகையிலான மேஜைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மேஜைகளின் உதவியுடன், மாணவர்கள் குறிப்பிட்ட, சில மணி நேரம் கண்டிப்பாக நின்றபடியே பாடங்களை கவனிக்க வேண்டும்.

விருப்பப்படும் மாணவர்கள், முழு நேரமும் நின்றபடியே பாடங்களை கவனிக்கலாம்.

மாணவர்கள் நீண்ட நேரம் அமர்ந்த வண்ணம் பாடங்களை கவனிப்பதால், அவர்களின் தசைகளின் செயல்பாடு குறைந்து விடுகிறது.

நின்றபடி பாடங்களை கவனிப்பதாலும், பிற வேலைகளில் ஈடுபடுவதாலும் தசைகளின் வலிமை அதிகரிப்பதால் கொழுப்பு குறைக்கப்பட்டு உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.

இந்த முறையை பின்பற்றும் மாணவர்களின் செயல்திறன், ஞாபகசக்தி, உடல் எடை மாற்றம், உடலில் ஏற்படும் வேறு சில மாற்றங்கள் போன்றவை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை செய்யப்படும்.

மாணவர்களின் உடலில் ஏற்படும் மாற்றத்தைப் பொருத்து, இந்த நடைமுறை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், கணனி மூலம் பாடம் நடத்தும் நடைமுறையும், தேவைக்கு அதிகமான அளவில் உண்பதும், உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்காததுமே மாணவர்களின் உடல்எடை அதிகரிப்பதற்கு காரணம்.

அதனை தவிர்க்க திட்டம் தீட்டாமல், நின்றபடியே பாடம் படிக்க சொல்வது நகைப்புக்கு உரியது என கருத்து தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.