த.தே.கூட்டமைப்பின் நிராகரிப்பும் அரசின் பதிலும்

Written by vinni   // December 26, 2013   //

mulliyavalaiஇலங்கையில் போர்க்கால இழப்புகள் பற்றிய அரசாங்கத்தின் கணக்கெடுப்பு மீதான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விமர்சனங்களையும் சந்தேகங்களையும் இலங்கை புள்ளிவிபர திணைக்களம் நிராகரித்துள்ளது.

கணக்கெடுப்பு நடைமுறை பற்றிய அறிவின்றியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை நிராகரிப்பதாக நேற்று புதன்கிழமை அறிவித்ததாகவும், புள்ளிவிபர திணைக்களத்தின் தலைமை இயக்குநர் டிசிஏ குணவர்தன பிபிசியிடம் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின்படியே, இலங்கையின் போர்க்கால இழப்புகள் குறித்து கடந்த ஒருமாத காலமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

1982-ம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மோதல் சூழ்நிலைகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள், வேறு ஆட்சேதங்கள் மற்றும் சொத்து இழப்புகள் தொடர்பில் நாடெங்கிலும் வீடுவீடாகச் சென்று அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர்.

ஆனால் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட விதம் மற்றும் அதன்போது மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டன.

இந்தக் கணக்கெடுப்பில் நம்பகத்தன்மை இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு கூடி முடிவெடுத்துள்ளது.

ஒட்டுமொத்த அறிக்கை ஒருமாதத்தில்

இந்த விமர்சனங்களை பிபிசியிடம் நிராகரித்த புள்ளிவிபர திணைக்களத்தின் தலைமை இயக்குநர் டிசிஏ குணவர்தன, இந்தக் கணக்கெடுப்பின் முதலாவது அறிக்கை இன்னும் ஒருமாத காலத்தில் வெளியாகும் என்று கூறினார்.

கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆட்சேதங்களும் சொத்து இழப்புகளும் தொடர்பான ஒட்டுமொத்த எண்ணிக்கைகளுடன் அந்த முதல் அறிக்கை வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

அதன் பின்னர், 83-ம் ஆண்டு நிலைமை, 89-ம் ஆண்டில் நிலவிய நிலைமை, இறுதியில் 2009-ம் ஆண்டில் முடிவுக்குவந்த யுத்த நிலைமை இப்படி 30 ஆண்டுகால நிலைமைகள் தொடர்பான தனித்தனியாக புள்ளிவிபரங்கள் இரண்டாவது அறிக்கையில் வெளியாகும் என்றும் கூறினார் டிசிஏ குணவர்தன.

உங்களின் கணக்கெடுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளதே என்று கேட்டபோது, எங்களின் திணைக்களம் கடந்த காலங்களில் இப்படியான பல கணக்கெடுப்புகளை நடத்தியிருக்கிறது. அவை தோல்விகரமானவை என்று எவரும் இதுவரை சொன்னதில்லை என்றார் குணவர்தன.

சில சந்தர்ப்பங்களில் பாதிப்புகள் பயங்கரவாதிகளால் ஏற்படுத்தப்பட்டதா, அல்லது சிவில் உடையில் வந்தவர்களால் ஏற்படுத்தப்பட்டதா என்பது போன்ற சில கேள்விகளை நாங்கள் கேட்டிருந்தோம்.

தேவையென்றால் தமக்குத் தெரியாது என்று மக்கள் கூறமுடியும். இப்படியான காரணங்களால் மட்டும் இந்தக் கணக்கெடுப்பை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட முடியாது என்றார் இலங்கை புள்ளிவிபர திணைக்களத்தின் தலைமை இயக்குநர்.


Similar posts

Comments are closed.