போர் குற்றங்கள் தொடர்பான காணொளிகளை அரச ஊடகங்களே சனல் 4 ஊடகத்திற்கு வழங்கின! : லக்ஷ்மன் கிரியெல்ல

Written by vinni   // December 16, 2013   //

laxmanஇலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பான காணொளிகளை அரச ஊடகங்களே சனல் 4 தொலைக்காட்சி வழங்கியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என அரசாங்கம் கூறினாலும், இந்த உண்மை வெளியில் தெரிந்து விடும் என்பதற்காக வழக்கை தாக்கல் செய்யவில்லை.

யுத்தம் நடைபெற்ற பொழுது போர் முன்னரங்க பகுதிகளில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பான செய்தி சேகரிப்புகள் அரச ஊடகங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

தனியார் ஊடகங்களுக்கோ, வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. போர் குற்றங்கள் தொடர்பான காணொளிகளை அரச ஊடகங்களே இரகசியமான முறையில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு விற்பனை செய்தாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

தேசிய ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் சார்பில் போர் முனையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த சமன் குமார ராமவிக்ரம இரண்டு கெமராக்களில் சம்பவங்களை பதிவு செய்து ஒன்றை அரச தொலைக்காட்சிக்கு வழங்கி விட்டு, போர் களத்தில் இருந்தே மற்றைய கெமராவில் எடுக்கப்பட்ட காட்சிகளை செய்மதி மூலமாக வெளிநாட்டு ஊடகங்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

அரச தொலைக்காட்சிகள் வெளியிட்ட போர் தொடர்பான காட்சிகள் அதே சமயத்தில் அல்-ஜெசீரா போன்ற ஊடகங்களிலும் வெளியாகின.

அந்த காட்சிகள் அரச தொலைக்காட்சிகளில் இருந்து பெறப்பட்டிருந்தால் அவற்றில் அரச தொலைக்காட்சிகளின் இலச்சினை இருந்திருக்க வேண்டும். எனினும் அவற்றில் அரச தொலைக்காட்சிகளின் இலச்சினைகள் இருக்கவில்லை.

இதன் மூலம் அரச தொலைக்காட்சிக்கு அனுப்பிய காட்சிகளின் பிரதிகள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பது நிரூபணமாகியுள்ளது.

இவற்றுடன் மேலும் சில காணொளிகள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுடன் அவற்றில் போர் குற்றங்கள் பற்றிய காட்சிகள் இருந்துள்ளன. இது பற்றி அறிந்து கொண்டுள்ள அரசாங்கம் வாயை மூடிக்கொண்டிருக்கின்றது.

இதனை நன்கு அறிந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சு ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இருந்த சகல காணொளிகளையும் எடுத்துச் சென்றது. அரசாங்கத்தின் ஆட்களே போர் குற்றங்கள் பற்றிய காட்சிகளை சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளனர் என்பதை அறிந்தே அரசாங்கம் வழக்கு தாக்கல் செய்யாமல் உள்ளது.

இது குறித்து நான் கடந்த 2 ஆம் திகதி மற்றும் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். அப்போது அங்கிருந்த அமைச்சர்கள், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பதிலளிக்கவில்லை.

அதேவேளை போர் குற்றங்கள் பற்றி விசாரணை நடத்துவதாக அரசாங்கம் இணக்கத்தை வெளியிட்டது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி ஐ.நா செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் இலங்கை வந்த போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த அரசாங்கம் இணங்கியது என்றார்.


Similar posts

Comments are closed.