தொப்பி, பர்தா அணிந்த புகைப்படங்களுக்கு அனுமதியில்லை என்பது மனித உரிமை மீறல்

Written by vinni   // December 15, 2013   //

green eyes red green eyes muslim hijab arab 2544x1680 wallpaper_www.wallpaperfo.com_88புதிதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஆள் அடையாள அட்டையில் தொப்பி மற்றும் பெண்களின் பர்தா போட்ட புகைப்படங்களுக்கு அனுமதியில்லை என்பது இந்த நாட்டில் அரங்கேறும் மற்றுமொரு மனித உரிமை மீறலாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்தார்.

மேற்படி ஆளடையாள அட்டை சம்பந்தமான ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

முஸ்லிம் பெண்களைப் பொறுத்த வரை அவர்கள் பகிரங்க இடங்களில் தலை மூடியிருப்பது சமயச் சட்டமாக இருப்பதுடன் அவர்களின் கலாச்சாரமாகவும் உள்ளது. இந்த நிலையில் பகிரங்கமாக எடுக்கப்படும் ஆளடையாள அட்டை எந்தவொரு கலாச்சாரத்தையும் பிரதி பலிக்கக்கூடாது என்பதன் மூலம் முஸ்லிம் பெண்களின் உரிமை பறிக்கப்படுவதுடன் முஸ்லிம் மக்களை கருவறுக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய சட்டங்களை கொண்டு வருகிறார்கள் என்றே நாம் பார்க்கிறோம்.

அதே போல் நமது நாட்டில் உள்ள சகல மத குருமார்களும் தமது மத கலாச்சார ஆடைகளை அணிந்தே ஆளடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்கிறார்கள். இந்த வகையில் மௌலவிமார் தொப்பி போட முடியாத நிலையிலும் அதேபோல் கிறிஸ்தவ பாதிரிமார், மற்றும் இந்து சாமிகள் தமது சமயத்தை பிரதிபலிக்கும் ஆடை அணிய முடியாதவாறும் தடுக்கப்படுகிறது.

அதேவேளை பௌத்த குருமார் நிச்சயம் தமது சமய முறைப்படி புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படுவர் என்பதை உறுதியாக எம்மால் கூற முடியும். ஏனெனில் அவர்கள் ஆளடையாள அட்டை புகைப்படத்துக்காக என முடி வளர்க்கவோ அல்லது டோப்பா போடவோ மாட்டார்கள்.

அத்துடன் கோட்டை அணிந்து புகைப்படம் எடுத்தலை ஆட்பதிவு திணைக்களம் அனுமதிக்குமா என்றும் கேட்கிறோம். அதனை அனுமதித்தால் ஆங்கில கலாச்சாரத்துக்கு இடமளிக்கும் இந்த அரசாங்கம், தமது நாட்டின் பாரம்பரிய கலாச்சாரங்களை மறுக்கின்றது என்றே ஆகிவிடும். அதே போல் தலை திறந்து புகைப்படம் எடுப்பது கூட சிங்கள, தமிழ் கலாச்சாரம் என்பதால் அதனையும் தடை செய்ய வேண்டும். இப்படி பார்த்தால் ஆண்களும் பெண்களும் தலையை மொட்டையடித்துக்கொண்டு நிர்வாணமாக புகைப்படம் எடுப்பதன் மூலம்தான் எவரது கலாச்சாரத்தையும் பிரதிபலிக்காத வகையில் புகைப்படம் அமையும். இதனைத்தான் இந்த அரசாங்கம் எதிர் பார்க்கிறதா?

ஆக, எந்தவொரு மனிதனும் தனது சமய கலாச்சார ஆடைகளை அணிவதற்கு மனித உரிமை சாசனம் இடமளித்துள்ளது. இதற்கிணங்க ஆளடையாள அட்டையிலும் தமது சுய விருப்பத்தினாலான ஆடைகளை அணிய இடமளிக்க வேண்டும் என்பதை முஸ்லிம் மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.


Similar posts

Comments are closed.