சிரியாவில் வான்வழித் தாக்குதல்: 14 சிறுவர்கள் பலி

Written by vinni   // December 15, 2013   //

syria_warplane_001சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி ஏராளமானோரைப் பலி வாங்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ராணுவம் நடத்திவரும் வான்வழி, ஏவுகணை மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல்களிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இடைவிடாத போரினால் உருக்குலைந்த நகரமான அலெப்போவில் இன்று புரட்சியாளர்கள் நிறைந்த பகுதி ஒன்றில் நடைபெற்ற வான்வழித் தாக்குதல்களில் 22 பேர் பலியாகினர் என்றும் அவர்களுள் 14 பேர் சிறுவர்கள் என்றும் சிரியாவில் உள்ள மனித உரிமைக் கண்காணிப்புக் கழகம் தெரிவித்துள்ளது. சிரியாவின் பொருளாதார மையமாக ஒரு காலத்தில் விளங்கிய அலெப்போவில் பலமுறை ஹெலிகாப்டர் தாக்குதல்கள் நடந்ததாக ஊடக நிலையங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த ஹெலிகாப்டர்கள் சுற்றியிருந்த பல பகுதிகளிலும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வீசி அழிவை ஏற்படுத்தியதாக இவற்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று டமாஸ்கசிற்கு வடகிழக்கே உள்ள அத்ரா நகரத்தில் போராளிகள் தாக்குதல்களைத் தொடங்கினர். அதுமுதல் அங்கு நடைபெற்ற கிளர்ச்சிகளிலும், வான்வழித் தாக்குதல்களிலும் ஆறு ஆண்கள் அடங்கிய 15 பேர், 18 வயது இளைஞன் ஒருவன் மற்றும் எட்டு சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த கண்காணிப்பு மையம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள புரட்சியாளர்களை முற்றிலும் அழிப்பதாகக் கூறி கடந்த ஐந்து தினங்களாக ராணுவம் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.