நெல்சன் மண்டேலாவின் உடல் நல்லடக்கம்

Written by vinni   // December 15, 2013   //

Nelson+Mandela1தென்னாப்ரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான நெல்சன் மண்டேலாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கோசா பழங்குடியின மரபுகளின்படி, நாட்டின் கிழக்கு கேப் மாகாணத்தில் மண்டேலா சிறு வயதில் வாழ்ந்த கூனு பகுதியில் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான நிலத்தில் அவரது நல்லடக்கம் நடைபெற்றது.

 நல்லடக்க நிகழ்வில், மண்டேலாவின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை போற்றும் வகையிலான பாடல்கள் இசைக்கப்பட்டு, கவிதைகள் வாசிக்கப்பட்டன.

முன்னதாக, அரச மரியாதையுடன் கூடிய இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன. அதில் ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

தென்னாப்ரிக்காவில் வெள்ளையின- சிறுபான்மை ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து அங்கு பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியவர் நெல்சன் மண்டேலா என்று அவருக்கு புகழாரங்கள் சூட்டப்பட்டன.

“பயணம் முடிந்தாலும் வழித்தடம் தொடரும்”

நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்கான நீண்ட பயணம் முடிந்து விட்டாலும் அவரது வழித்தடங்களை பின்பற்றி கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று தென்னாப்ரிக்காவின் தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜுமா கூறினார்.

தென்னாப்ரிக்க மக்கள் அடுத்தவர்கள் மீது குற்றஞ்சொல்வதை நிறுத்திவிட்டு, மண்டேலாவை முன்னுதாரணமாகக் கொண்டு, அவர் எப்படி நாட்டை வழி நடத்தினாரோ அதுபோல நாட்டை வழிநடத்த வேண்டும் என்று அவரது பேத்தி நண்டி தெரிவித்துள்ளார்.

மண்டேலாவுடன் சிறையில் இருந்த அஹ்மத் கத்ராடா, தான் ஒரு சகோதரனை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கை இப்போது சூனியமாக உள்ளதாகவும் பிரச்சனைகள் என்றால் யாரிடம் செல்வது என தனக்குத் தெரியவில்லை என்றும் கூறினார்.


Similar posts

Comments are closed.