நெருக்கடிக்குள் சிக்கியுள்ள‌ சிறிலங்கா : முழுநிலவு நாளில் அமைச்சரவையை கூட்டும் ஜனாதிபதி

Written by vinni   // December 14, 2013   //

slparliamentநெருக்கடிக்குள்ளாகியுள்ள பல முக்கியமான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக, முழுநிலவு நாளான நாளை மறுநாள் சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

பௌத்தர்களின் வழிபாட்டுக்குரிய நாளாக கருதப்படும் முழுநிலவு நாள் சிறிலங்காவில் விடுமுறை நாளாகவே கடைப்பிடிக்கப்படுகிறது.

குறித்த நாளில் எந்த அரச பணிகளும் ஆற்றப்படுவதில்லை.

இந்தநிலையில், நாளை மறுநாள்- முழுநிலவு நாளில் அமைச்சரவையை அவசரமாக கூட்டியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

நாளை மறுநாள் காலை 7 மணியளவில் சிறிலங்கா அமைச்சரவைக் கூடம்டம் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில், சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னாபிரிக்கா மற்றும் கென்யாவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னர் சிறிலங்கா அதிபர் பங்கேற்கும் முதலாவது அதிகாரபூர்வ கடமை இந்த அமைச்சரவைக் கூட்டமாகும்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் வரவுசெலவுத்திட்டங்கள் தொடர்ச்சியாக தோற்கடிக்கப்பட்டு வருவது அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது.

அத்துடன், போதைப்பொருள் கொள்கலனுக்கு அனுமதிக் கடிதம் கொடுத்த சிறிலங்கா பிரதமருக்கு எதிராக கிளம்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் இதில் ஆராயப்படவுள்ளது.

இதற்கிடையே வரும் 18ம் நாள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய சம்மேளனக் கூட்டமும் நடைபெறவுள்ளது.

இந்த நெருக்கடிகளின் காரணமாகவே முழுநிலவு நாள் என்றும் பாராமல் மகிந்த ராஜபக்ச அமைச்சரவையை கூட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் முழுநிலவு நாளன்று அமைச்சரவை கூடவுள்ளது இதுவே முதல்முறையாகும்.


Similar posts

Comments are closed.