இனப்படுகொலை! இஸ்லாமிய தலைவருக்கு தூக்கு

Written by vinni   // December 12, 2013   //

Suicide-logoவங்காளதேசத்தின் இஸ்லாமிய எதிர்க்கட்சி தலைவருக்கு மரண தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 1971ஆம் ஆண்டு வங்காளதேசத்தில் விடுதலைப் போர் நடைபெற்றது.

அப்போது பாகிஸ்தானுடன் சேர்நது இனப்படுகொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பாக ஜமாயித் இ இஸ்லாமி கட்சியின் நான்காம் நிலைத் தலைவரான அப்துல் காதர் மொல்லா வங்கதேச அரசினால் சிறை வைக்கப்பட்டார்.

மேலும் டாக்காவின் புறநகர்ப் பகுதியான மிர்பூரில் நடந்த நூற்றுக்கணக்கான கொலைகளுக்கு இவர் காரணமாக இருந்தார் என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விசாரணையின் முடிவில் மொல்லாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இவருடைய தண்டனையை தீவிரமாக்க வேண்டும் என்று, ஆயிரக்கணக்கான பொதுவுடைமைவாதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், நீதிபதி முசம்மல் ஹொசைன் போர்க்கால நீதிமன்றத்தின் ஆயுள் தண்டனையைத் திருத்தி மரண தண்டனைக்கு உத்தரவிட்டார்.

அதன்படி அவருக்கு நேற்று முன்தினம் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டி மொல்லா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதால், கடைசி நேரத்தில் தண்டனை நிறைவேற்றுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, மொல்லாவின் மனுவை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி, மொல்லாவின் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

தற்போது டாக்கா மத்திய சிறையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள 65 வயதான மொல்லாவுக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

ஆனால், எப்போது நிறைவேற்றப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை.


Similar posts

Comments are closed.