தடுமாறும் இந்திய அணி: ஆறுதல் வெற்றிக்கு முயற்சிக்குமா?

Written by vinni   // December 11, 2013   //

1b1bf1e9-8beb-4a6c-8be3-872d98e6b3c7_S_secvpfஇந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்வதற்கு முன், போதிய அனுபவம் இல்லாத இளம் வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டு எப்படி சாதிக்கும் என்ற விமர்சனம் எழுந்தது. ஷிகர் தவன், ரோஹித், விராட் ஆகிய மூவரும் இந்த ஆண்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து அசத்தல் ஃபார்மில் இருந்தனர். இதனால் பேட்ஸ்மேன்கள் மீது அதிக நம்பிக்கை இருந்தது.

ஆனால், தென் ஆப்பிரிக்க சென்ற பின் நிலைமை தலைகீழானது. முதல் ஆட்டத்தில் பெளலர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். ஆனால் 2-வது ஆட்டத்தில் 280 ரன்களில் தென் ஆப்பிரிக்காவைக் கட்டுப்படுத்தினர். இரண்டு ஆட்டங்களிலும் பேட்ஸ்மேன்கள் தான் அதிகம் ஏமாற்றினர்.

இந்திய ஆடுகளங்களில் எதிரணி பெளலர்களை கதிகலங்க வைத்த பேட்ஸ்மேன்கள், ஜோஹன்னஸ்பர்க் மற்றும் டர்பனில் ஸ்டெயின், சாட்சோபே, மோர்கல் மற்றும் மெக்லரன் வேகத்தில் மிரண்டு நின்றனர். குறிப்பாக ஸ்டெயின் ஸ்விங், பெளன்ஸர் மற்றும் வேகத்தில் அச்சுறுத்தினார்.

போராட்ட குணம் படைத்த விராட் கோலி, இரட்டை சதம் அடித்த ரோஹித் மற்றும் ஷிகர் தவன் ஆகிய டாப் ஆர்டர்கள் முதல் 10 ஓவர்கள் வரை நிலைத்து நிற்காததால் மிடில் ஆர்டர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 2-வது ஆட்டத்தில் இந்திய பெளலிங் பரவாயில்லை தானே தவிர, ஓஹோ என பாராட்டும்படி இல்லை. தென் ஆப்பிரிக்க பெளலர்கள் போல, இந்திய பெளலர்கள் அந்த அணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தவில்லை.

தென் ஆப்பிரிக்க அணிக்கு பேட்டிங், பெளலிங் என இரண்டு தரப்பும் சிறப்பாக உள்ளது. தொடக்க வீரர்கள் டி காக், ஆம்லா இருவரும் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுப்பதால், பின் வரிசையில் இறங்குபவர்கள் நெருக்கடி இல்லாமல் ஆடுகின்றனர். 30 முதல் 35 ஓவர்கள் வரை தொடக்க ஜோடியை வீழ்த்த முடியாமல் இந்திய பெளலர்கள் திணறுவது பரிதாபத்துக்குரியது.

தற்போது ஓரளவு தென் ஆப்பிரிக்க சூழல் இந்திய வீரர்களுக்கு பரிச்சயமாகி இருக்கும். ஏற்கனவே தொடரை வென்று விட்டதால் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக, முக்கியத்துவம் இல்லாத 3-வது ஆட்டத்தில் மூத்த வீரர் காலிஸ் மற்றும் வேகப்புயல் ஸ்டெயின் ஆகியோருக்கு ஓய்வு அளிக்க தென் ஆப்பிரிக்கா முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. எனவே, இதை இந்திய அணியினர் தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொள்வர் என நம்பலாம்.

சூழல் பிரச்னை அல்ல

ரோஹித் கூறியது: டர்பனில் இருந்த சூழல் இந்தியாவில் இருக்கும் சூழலை ஒத்திருந்தது. எனவே, சூழல் ஒரு பிரச்னை அல்ல. பேட்ஸ்மேன்கள் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைக்காததே தோல்விக்கு காரணம். இன்னும் ஒரு ஆட்டம் மீதமுள்ளது.

இதில் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்படுவர் என நம்புகிறேன். டெஸ்ட் தொடர் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். இருப்பினும் டெஸ்ட் தொடருக்கு இன்னும் நாள்கள் இருப்பதால், இப்போதைக்கு அதில் கவனம் செலுத்தவில்லை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி அணியின் வெற்றியில் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

பயிற்சியில் கோபப்பட்டு களத்தில் பொங்கிய ஸ்டெயின்

இந்தத் தொடரில் இந்திய அணிக்கு கிலி ஏற்படுத்தும் சிம்ம சொப்பனம் ஸ்டெயின். இவர் தன் முதல் ஸ்பெல்லில், சொல்லி வைத்தாற்போல இந்திய டாப் ஆர்டரை வீழ்த்தி அணியின் வெற்றியை எளிதாக்குகிறார். ஒருநாள் தொடருக்கு அவர் தயாரான விதம் குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.

முதல் ஒருநாள் ஆட்டத்துக்கு முன்னதாக ஜோஹன்னஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்க அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். பயிற்சி முடியும் தருணத்தில் ஸ்டெயின் வழக்கத்துக்கு மாறாக பேட்டிங் பயிற்சி எடுத்துள்ளார். ஆனால், பந்து அவரது பேச்சைக் கேட்டது போல பேட் அவருக்கு கட்டுப்படவில்லை. சுற்றிச் சுற்றி அடித்தும் பந்து நீண்ட தூரம் செல்லவில்லை. சில சமயம் போல்டாகியுள்ளார். இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த ஸ்டெய்ன், வலைப்பயிற்சியின்போது பேட்டைக் கொண்டு ஸ்டெம்புகளை ஓங்கி அடித்துள்ளார்.

இதை களத்தில் இருந்த பயிற்சியாளர் ரஸல் டொமிங்கோ, கேப்டன் டி வில்லியர்ஸ் மற்றும் சக வீரர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளனர். யாரும் ஸ்டெயினை சமாதானம் செய்யவில்லை. மாறாக வீரர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். காரணம், ஆட்டம் தொடங்கும் முதல்நாள் ஸ்டெயின் அதிக கோபத்தில் இருந்தால், மறுநாள் அது அவரது பந்துவீச்சில் எதிரொலிக்கும் என்பது தென் ஆப்பிரிக்க வீரர்களின் கணிப்பு. அதன்படியே அவர்கள் கணிப்பு பலித்தது.

ஆட்டம் முடிந்த பின் ஸ்டெயின் பேட்டி அளிக்கையில் “”என்னைப் போலவே மோர்கலையும் சக வீரர்கள் கோபப்படுத்தி இருந்தால் இன்னொரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் கிடைத்திருப்பார்” என்றார்.

ஸ்டெயின் வேகத்தைப் பார்த்து நாங்கள் பயப்படவில்லை என விராட் கோலி தெரிவித்தாலும், அவரது பந்தைத் தொட பயந்தனர் என்பது உண்மை. முதல்நாள் ஆட்டத்தில் ஸ்டெயின் வீசிய 15 பந்தை ரோஹித் தொடவே இல்லை.

ஒருவழியாக பந்தை பேட்டில் வாங்க முயற்சித்தபோது அவர் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். ஒருநாள் ஆட்டத்தில் இரட்டைச்சதம் அடித்த ரோஹித் பந்தைத் தொடவே தடுமாறுவது ஆச்சர்யமளிக்கிறது என ஸ்டெயின் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

உலகம் போற்றும் ஒரு பேட்ஸ்மேனை அவர் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேற்றுவதை விட அவரை நீண்டநேரம் களத்தில் நிற்க வைத்து, தன் பந்தில் தடுமாற வைக்க வேண்டும் என்பதே ஸ்டெயின் திட்டம் போலும். ரோஹித் விஷயத்தில் நடந்ததும் அதுவே.

சச்சின் இல்லாதது எங்களுக்கு சாதகம்: ஒருநாள் தொடரிலேயே தடுமாறும் நிலையில், டெஸ்ட் தொடரில் இந்திய அணி எந்தளவு சாதிக்கும் எனத் தெரியவில்லை. சச்சின் ஓய்வுபெற்ற பின் இந்திய அணி பங்கேற்கும் முதல் டெஸ்ட் தொடர் இது.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டொமிங்கோ கூறுகையில், “”இந்திய அணியின் மிகச்சிறந்த வீரர் சச்சின்.ஓய்வு அறையில் வீரர்களுக்கு ஊக்க சக்தியாக விளங்கிய சச்சின் இல்லாதது இந்திய அணிக்குப் பின்னடைவே. தற்போது அவரது விக்கெட்டை வீழ்த்த வேண்டுமே என நாங்கள் சிந்திக்க வேண்டியதில்லை. தென் ஆப்பிரிக்க அணியின் பணியை சச்சின் எளிதாக்கி விட்டார்” என்றார்.


Similar posts

Comments are closed.