சர்வதேச மனித உரிமை தினத்திலும் கூட அரசின் மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல் – சமகி அமைப்பு

Written by vinni   // December 11, 2013   //

 tringo-01சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் திருகோணமலை நகரில் நடத்தப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் சமகி அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

அமைதியாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் மீது அரசாங்கம் வன்முறையாளர்களை ஏவி தாக்குதல் நடத்திய சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் சமகி அமைப்பின் உறுப்பினர்கள், நவசமசமாஜ கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் காணாமல் போனவர்களை தேடி அறியும் குழுவின் பணிப்பாளரான சுதந்திரம் மகேந்திரன் உட்படட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சர்வதேச மனித உரிமை தினத்திலும் கூட அரசாங்கம் மிலேச்சத்தனமாக மனித உரிமைகளை மீறியுள்ளது.

சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மட்டுமல்ல, மகிந்த ராஜபக்ஷ தலைவராக இருக்கும் பொதுநலவாயத்தின் கொள்கைகளையும் இந்த அரசாங்கம் ஐந்து சதத்திற்கும் மதிக்காது என்பது இந்த சம்பவம் மூலம் தெளிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து முறைப்பாடு செய்ய திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது, முறைப்பாட்டை பொலிஸார் ஏற்க மறுத்து விட்டனர். இதன் மூலம் மனித உரிமைகளை பாதுகாக்கும் அரசாங்கத்தின் உண்மையான நிர்வாண தோற்றம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒருபோதும் மக்களின் உரிமைகளை வழங்க போவதில்லை என்பது இந்த சம்பவங்கள் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளன.

மக்கள் உரிமைகளை பெறவேண்டும் என்றால் வீதியில் இறங்கி போராட வேண்டும் என சமகி அமைப்பு விடுத்தள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.