இந்திய அமைதிப் படையினர் , இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக, பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர்: இலங்கையின் பாதுகாப்பு இணையத்தளம்

Written by vinni   // December 10, 2013   //

P1050806-712924கடந்த காலத்திலும் தற்போதும் இந்தியா, இலங்கை தமிழர்களின் மனித உரிமைகளை மீறி வருவதாக இலங்கையின் பாதுகாப்பு இணைத்தளத்தில் கட்டுரை ஒன்று பிரசுரமாகியுள்ளது.

ரொஹான் எதிரிசிங்க என்பவர் இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது மனித உரிமைகளை காரணம் காட்டி இந்திய பிரதமர், பங்கேற்கக்கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட்ட தலைவர்கள் கோரினார்

மன்மோகன்சிங், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்காது போனால், கொழும்பின் பொதுநலவாய மாநாடு ரத்தாகும் என்பதே ஜெயலலிதாவின் எண்ணமாக இருந்தது

அவ்வாறு அவர் நினைத்தது 2013 ஆம் ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவையாகவே இருக்கும். எனினும் இலங்கை தடைகள் யாவையும் தாண்டி பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்தியமை இலங்கையின் சிங்கள மக்களுக்கு மாத்திரமல்ல ஏனைய மக்களுக்கும் பெருமையை சேர்த்துள்ளது.

ஜெயலலிதா உட்பட்ட தமிழக தலைவர்கள் இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதை காரணம் காட்டி இலங்கை இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன.

எனினும் இந்திய அமைதி காப்புப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்த போது, அவர்களினால் தமிழர்களுக்கு எதிராக, குறிப்பாக யாழ்ப்பாண தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் பாரியளவில் இடம்பெற்றதாக இலங்கையின் பாதுகாப்பு இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக செய்தியாளர் எம்.ஆர்.நாராயணசாமியின் ‘லங்காவின் புலிகள்’ என்ற நூலில் இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாணம் உட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

பொதுமக்களையும் கெரில்லாக்களையும் இனங்காணமுடியாத நிலையில் இந்திய படையினர் பொதுமக்களை தண்டித்த சம்பவங்கள் அதில் கூறப்பட்டுள்ளன.

பிரிகேடியர் மக்ஜிட் சிங்கின் கருத்துப்படி தமக்கு விடுதலைப்புலிகளையும் பொதுமக்களையும் இனங்காண முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக நாராயணசாமி தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஊடரடங்கு சட்டத்தை அமுல்செய்து விட்டு இந்திய அமைதிப்படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாண மருத்துவமனையில் 21 மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை இந்திய படையினர் கொலை செய்தனர்.

இதில் தமது பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உயர் மருத்துவர்களும் அடங்கியிருந்தனர்.

இரண்டு தாதிகள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மகப்பேற்று மருத்துவர் ஒருவர் இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்திய படையினரால் குறித்த 21 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டமையை இந்திய தளபதிகளில் ஒருவரான ரவீந்திர்சிங்க காலொன் உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் கோபத்தை ஏற்படுத்தியது. எனினும் இந்திய படைத்தரப்பினர், யாழ்ப்பாணத்தில் குறைந்தளவு மக்கள் இழப்பே ஏற்பட்டதாக தெரிவித்ததாக செய்தியாளர் நாராயணசாமி தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமது படையினர் இலங்கை தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டமையை இந்தியாவின் முக்கிய படைத்தளபதிகளே ஏற்றுக்கொண்டுள்ளனர்

இந்தநிலையில் தமிழர்களின் மனித உரிமைமீறல்களில் இந்தியா முக்கிய பங்கை வகித்தமை மன்மோகன்சிங் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு தெரிந்திருக்காமல் இருக்காது.

இந்தநிலையில் கொழும்பு மாநாட்டில் ஜெயலலிதாவின் எதிர்ப்புக்காரணமாக பங்கேற்றமுடியாமல் தடுக்கப்பட்டமைக்காக இந்திய பிரதமர் மன்மோகன்சிங், ஜெயலலிதாவுக்கு நன்றிக்கூறவேண்டும் என்று கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.