இந்தியக் கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்ஷிப் உரிமையை ஸ்டார் நிறுவனம் பெற்றது

Written by vinni   // December 9, 2013   //

d7f3ee69-4709-4986-bcc8-801b3c21beb8_S_secvpfசென்னையில் இன்று நடைபெற்ற பிசிசிஐயின் மார்க்கெட்டிங் கமிட்டி கூட்டத்திற்குப்பின், இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வருட ஸ்பான்சர்ஷிப் உரிமையை ஸ்டார் பிரைவேட் லிமிட்டெட் பெற்றது. இதன்படி, இருநாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டிக்கு ரூ.1.92 கோடியும், ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளுக்கு தலா ரூ.61 லட்சமும் ஸ்டார் நிறுவனம் செலுத்தும். 

 
இந்த உரிமம் வரும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து 2017 ஆம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறும் அனைத்து பிசிசிஐ, ஐசிசி மற்றும் ஏசிசி போட்டிகள், வர்த்தக ஒளி மற்றும் ஒலிபரப்புகளுக்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் சஞ்சய் பட்டேல் கூறினார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்கள் என்று அழைக்கப்படும் உரிமை இவர்களுக்கு வழங்கப்படும். மேலும், சீனியர் ஆண்கள் அணி, ஆண்கள் ஏ-பிரிவு அணி, 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அணி மற்றும் பெண்கள் அணியினருக்கான சீருடையில் இவர்கள் தங்களின் வர்த்தக முத்திரையை பதித்துக் கொள்ளலாம் என்றும் சஞ்சய் பட்டேல் தெரிவித்தார்.
 
இந்த ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதியிலிருந்து ஏலத்திற்கான டெண்டர்கள் பெறப்பட்டன. இன்று மதியம் மூன்று மணிக்கு டெண்டர்கள் பெறுவது நிறுத்தப்பட்டு பிரிக்கப்பட்ட டெண்டர்கள் மதிப்பிடப்பட்டன.
நிர்வாகம் மொத்தமாகப் பெற்ற ஏழு டெண்டர்களில் இரண்டு இறுதிக்கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டது. அவற்றில் ஒன்றான சஹாரா நிறுவனத்தினரின் டெண்டர் தகுதியற்றதாகத் தெரிவிக்கப்பட்டு ஸ்டார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
இதுநாள்வரை இந்தியக் கிரிக்கெட் அணியின் வர்த்தக உரிமையாளர்களாக இருந்துவந்த சஹாரா நிறுவனம் ஐபிஎல் உரிமம் பெறுவது குறித்து நிர்வாகத்துடன் ஏற்பட்ட சர்ச்சையால் இந்த மாதம் விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தது.
இதனைக் காரணமாகக் கொண்டே தங்களுக்குப் புதிய உரிமம் வழங்கப்படவில்லை என்று அந்நிறுவனம் குறை கூறியுள்ளது. தகுதியில்லை என்று ஆரம்பக் கட்டத்திலேயே விலக்காமல் இறுதிக்கட்டத்தில் முடிவெடுத்தது குறித்தும் அந்நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
சஹாரா நிறுவனமே உயர்ந்தபட்ச ஏலத்தொகை கேட்டிருந்தது. அதாவது இருதரப்பு போட்டிகளுக்கு தலா ரூ.2.03 கோடியும், ஐ.சி.சி. போட்டிகளுக்கு தலா ரூ.91 லட்சமும் ஏலம் கேட்டிருந்தது. எனினும் அந்த ஏல விண்ணப்பம் தகுதியற்றதாக கூறி நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.