மூன்று மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி

Written by vinni   // December 8, 2013   //

koli01டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து இருப்பது கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தியாகராயநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன்பு மாநில செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

பின்னர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது,

தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று ஏற்கனவே கருத்து கணிப்புகள் வெளியானது. இது எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்ற சந்தேகம் இருந்தது. தேர்தல் முடிவுகள் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியதன் மூலம் எந்த அளவுக்கு காங்கிரஸ் மீது மக்கள் கோபத்திலும், அதிருப்தியிலும் இருந்துள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான கட்சி பாரதீய ஜனதா என்றெல்லாம் குற்றச்சாட்டு வைத்தார்கள். அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு பா.ஜனதாவால் தான் நல்லாட்சி தர முடியும் என்று நம்பிக்கையுடன் மக்கள் வாக்களித்து உள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இதேபோல் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற மக்கள் வாக்களிப்பார்கள். டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி கணிசமான தொகுதிகளை கைப்பற்றி இருப்பது எதிர்பார்த்தது தான். ஷீலாதீட்சித் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று இருக்கலாம். காங்கிரஸ் மீதான வெறுப்பு இப்போது, வெளியே வந்து உள்ளது.

கெஜ்ரிவால் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து சென்றதால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கலாம். இதனை பாரதீய ஜனதா இழப்பு என்று கருத முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன், மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம், இளைஞர் அணி, மாநில செயலாளர் வினோஜ், மீனவர் அணி செயலாளர் சதீஷ், காளிதாஸ், டால்பின், ஸ்ரீதர், சரளா, பானிக்கிரா ஸ்ரீதர், கலையரசன், குணசேகர், யுவராஜ், ராத்மா சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேளச்சேரி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் திருப்புகழ் தலைமையில் 50–க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளில் வெற்றி ஊர் வலத்தை தொடங்கி தொகுதி முழுவதும் சென்று தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

இதில் நிர்வாகிகள் கேன்ஸ் ஆறுமுகராஜ், சம்பத்சங்கர், பாலசுப்பிரமணியம், சந்திர சேகர், தண்டபாணி, சிவசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Similar posts

Comments are closed.