மண்டேலாவிற்கு த.தே.கூட்டமைப்பு அஞ்சலி – கட்சிக் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டனர்.

Written by vinni   // December 7, 2013   //

Nelson+Mandela1தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையான அறிவகம், நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவை ஒட்டி இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டு இருப்பதுடன், தமது கட்சிக் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு அவரது உருவப் படத்திற்கும் மலர்தூவி அஞ்சலி செலுத்தியது.

இந்நிகழ்வு மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்களின் தலைமையில் இன்று மதியம் இடம் பெற்றது.

அவர்களால் வெளியிடப்பட்ட அஞ்சலிச் செய்தியில்,

உலகின் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியவர்களின் வரிசையில் விடுதலைக்கான சர்வதேச குறியீடாகத் திகழ்ந்த நெல்சன் மண்டேலா அவர்களின் ஆத்மா அமைதி பெற்றமை அறிந்து எண்ணங்களாலும் உணர்வுகளாலும் ஒன்றித்து நிற்கின்ற ஈழதேசத்தவர்கள் தமது கவலைகளையும் அஞ்சலிகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியவர்கள் வையகம் உள்ள வரை மக்கள் மனங்களில் வாழ்ந்து வருகிறார்கள். நெல்சன் மண்டேலாவும் அத்தகைய ஓரு இலட்சியப் போராளி.

இரும்பை ஒத்த உறுதியுடன் கறுப்பின மக்களின் விடுதலைக்காய் போராடிய ஒரு நெருப்பு மனிதன். வெள்ளை இனத்தவர்கள் இட்ட இரும்பு தடைகளை உடைத்தெறிந்த விடுதலைப் பறவை.

தன்னினத்திற்காய் சிறைகளில் தவம் இருந்த சத்திய மனிதன் அவர். தன்னையே தியாகம் செய்து விடுதலையைச் செதுக்கிய சிற்பி. அத்தகைய உயர்ந்த இலட்சிய மனிதனை, அற்புதமான போராளியை, ஒப்பற்ற மாவீரனை உலகம் இழந்திருக்கின்ற இவ்வேளை, அவருக்கு ஈழ தேசத்திலிருந்து எண்ணங்களாலும் உணர்வுகளாலும் ஒன்றித்து, விடுதலைக்காய் அவாவி நிற்கின்ற எமது மக்கள் சார்பில் இறுதி வணக்கத்தைச் செலுத்துகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.