ஈழத் தமிழர்களுக்காக இன்று பதவி விலகுவாரா சிதம்பரம் ?

Written by vinni   // December 6, 2013   //

sithamparamஇலங்கைத் தமிழர்கள் நலன் குறித்து தற்போது அக்கறையோடு பேசி வரும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்காக பதவி விலகுவாரா என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

கடந்த 2009-ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, இலங்கைக்கு உறுதுணையாக நின்ற மத்திய அரசில் முக்கிய அங்கம் வகித்தவர் ப.சிதம்பரம்.

அப்போது வாய்மூடி மௌனியாக இருந்து விட்டு, அண்மைக் காலமாக இலங்கைத் தமிழர் நலன் குறித்துப் பேசி வருகிறார். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்தியா ஓயாது என்று சென்னையில் சிதம்பரம் சூளுரைத்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தினை சீர்குலைப்பதற்கான அனைத்து வேலைகளையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டு விட்டது. அந்தத் தருணங்களில் எல்லாம் அவர் எதுவும் பேசாமல் இருந்து விட்டு, தற்போது அதற்கு எதிராகப் பேசுவதில் என்ன பயன் இருக்கப் போகிறது?

தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் களைய இந்தியத்தரப்பில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்காமல், அவர்கள் நலனில் அக்கறை இருப்பது போல் சிதம்பரம் சூளுரைப்பதில் ஒரு பயனும் இல்லை. இந்திய கடற்படைத் தளபதி ஜோஷி இலங்கைக்கு அண்மையில் சுற்றுப்பயணம் செய்திருந்தார்.

அப்போது இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை செய்ததாகக் கூறப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியாவுக்கு கடந்த வாரம் வந்து ரகசிய ஆலோசனை நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இலங்கை ராணுவத்துக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதையெல்லாம் தடுத்து நிறுத்தாமல் வெறுமனே இலங்கைத் தமிழர் நலனுக்காக சிதம்பரம் பேசுவது சரிதானா என்பதை சிந்திக்க வேண்டும். மத்திய அரசை நிர்பந்தித்து அவர்களுக்காக பதவி விலகும் துணிவு சிதம்பரத்துக்கு இல்லாமல் போனது ஏன் என்று தனது அறிக்கையில் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.


Similar posts

Comments are closed.