மாணவர்கள் இல்லாததால் மூடப்பட்ட பள்ளிகள்!

Written by vinni   // December 5, 2013   //

school_004சென்னையில் மாநகராட்சிப் பள்ளிகள் படிப்படியாக மூடப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் பள்ளிகள் மீதான மோகம் மக்களிடையே இன்னும் குறையவில்லை என்பதையே இது காட்டுவதாக கல்வி ஆர்வலர்கள் கவலை காட்டுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகின்றபோதிலும், மூடலும் மறுபக்கம் படு வேகமாக நடந்து வருவதாக சர்வே ஒன்று தெரிவித்துள்ளது.

சிறார் உரிமைகளும் நீங்களும் Child Rights and You (CRY) என்ற அமைப்பு நடத்திய சர்வேயில், சென்னையில் ஒரே வருடத்தில் 62 மாநகராட்சிப் பள்ளிகள் போதிய அளவில் மாணவர்கள் இல்லாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது.

மறுபக்கம் சென்னையில் தனியார் பள்ளிகள் அதி வேகமாக பெருகியும், பல்கியும் வருகின்றன. மூடப்பட்ட பள்ளிகள் அனைத்துமே தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளாகும்.

ஆனால் அரசோ இந்த பள்ளிகள் மூடப்படவில்லை. மாறாக மேம்படுத்தப்படுகின்றன என்று கூறுகின்றனர்.

அதாவது ஒரு தொடக்கப் பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளியை இணைத்து விடுகிறார்கள். இணைத்து விட்டு ஒரு பள்ளியை மூடி விடுகிறார்கள். இன்னொரு பள்ளியை மட்டும் இயங்க வைக்கிறார்கள்.

அதேசமயம் கடந்த 2 வருடங்களில் சென்னை மாநகராட்சியில் எந்தப் பள்ளியும் மூடப்படவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள்.

குறிப்பாக வட சென்னையி்ல் உள்ள ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களின் குழந்தைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் தங்களுக்கு அருகில் இருந்த மாநகராட்சிப் பள்ளிகள் மூடப்படுவதால் தொலைதூரம் போகும் நிலை ஏற்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பல அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் பெருமளவிலான மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் கூட, தனியார் பள்ளிகளுக்கு நிகரான அடிப்படைக் கட்டமைப்பு உள்ளிட்டவை இல்லாததால்தான், பெரும்பாலான மக்கள் இந்தப் பள்ளிகளுக்கு வரத் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

பல மாநகராட்சிப் பள்ளிகளில் ஒரே டீச்சரே பல வகுப்புகளுக்கும் செல்லும் நிலை உள்ளது. மேலும் ஒரே டீச்சரே பல பாடங்களையும் எடுக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித் தனியாக ஆசிரியர்கள் இருப்பதால் அங்கு தரம் நன்றாக இருப்பதாக பெற்றோர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் உண்மையில் தனியார் பள்ளிகளில்தான் பல மோசமான விடயங்கள் உள்ளன என்பது உண்மை தெரிந்தவர்கள் கருத்தாகும். அது நிறையப் பேருக்குப் புரிவதில்லை.

அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளில் தியாக மனப்பான்மையுடன் கூடிய ஆசிரியர்கள் இருக்கவே செய்கிறார்கள். நன்றாகவும் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

ஆனால் கட்டடம் சரியில்லை, அது சரியில்லை, இது சரியி்ல்லை என்று உண்மையில் பெற்றோர்கள்தான் தேவையில்லாமல் பணத்தைக் கொட்டி தனியார் பள்ளிகளில் தங்களது பி்ள்ளைகளை முடக்குகிறார்கள் என்பது இவர்களது வாதம்.


Similar posts

Comments are closed.