இந்திய – தென்னாபிரிக்க அணிகள் இன்று பலப்பரீட்சை

Written by vinni   // December 5, 2013   //

indianஇந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று வியாழக்கிழமை ஜோகன்னர்ஸ்பர்கில் நடைபெறுகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், பலமான தென்னாபிரிக்காவை அவர்களின் சொந்த மண்ணிலேயே இந்தியா சந்திக்கவுள்ளது.

தென்னாபிரிக்கா அணி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தாலும், சர்வதேச ஒரு நாள் அணிகள் தரவரிசை பட்டியலில் அந்த அணி 5வது இடத்தில்தான் உள்ளது. இந்தியா முதல் இடத்தில் உள்ளது. முதல் முறையாக ஒரு இளம் இந்திய அணி, வெளிநாட்டிற்கு சென்று விளையாடவுள்ளனர்.

இந்திய அணியைப் பொருத்த வரை அணியின் துடுப்பாட்டம் மிகப்பெரிய பலம். அணியில் விராத் கோஹ்லி, ஷிகர் தவாண், ரோஹித் ஷர்மா ஆகியோர், இந்த ஆண்டில் 1000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளனர்.

மத்தியதர வரிசையில் ஆடும் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரது ஆட்டம், கடந்த சில போட்டிகளில் சரியில்லை என்றாலும், இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவர்களோடு, அணியின் நம்பிக்கை நட்சத்திரமான தோனியும் இருப்பது, இந்திய அணிக்கு பலம் சேர்க்கும்.

தென்னாபிரிக்க அணியும், ஹசிம் ஆம்லா, குயின்டன் டி காக், கிரீம் ஸ்மித், அணியின் தலைவர் டிவில்லியர்ஸ், காலிஸ், ஜே.பி.டுமினி, டேவிட் மில்லர் என பேட்டிங்கில் திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது. அந்த அணியிலும், ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள், சமீபத்திய ஆட்டங்களில் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள, அனைத்து துடுப்பாட்டக்காரர்களும் முனைப்போடு இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.


Similar posts

Comments are closed.