வடக்கில் பிரச்சினை இராணுவத்தினாலேயே

Written by vinni   // December 3, 2013   //

vikneswaranவடமாகாணத்தில் இராணுவம் உள்ளதால்தான் மற்றைய பிரச்சனைகள் ஏற்படுகின்றது என ஐ.நா பிரதிநிதியிடம் தான் எடுத்து கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று (03) காலை விஜயம் மேற்கொண்ட ஐ.நா. சிறப்பு பிரதிநிதி சாலோக பொயனியை முதலமைச்சர் தனது இல்லத்தில் சந்தித்தார்.

அச் சந்திபின் பின்னர், முதலமைச்சர் ஊடகவியலார்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்து இருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டு இருக்கின்றனர். இராணுவம் வடமாகாணத்தில் இருப்பதனால் தான் மற்றையை பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

இதனால் வடக்கில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும் என அவரிடம் கூறினேன்.

அதற்கு அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் இராணுவம் இங்கே நிலை கொண்டு இருக்கும் என கேட்டார்.

அதற்கு நான் சொன்னேன் இராணுவம் இன்னமும் 100 வருடங்களுக்கு இங்கு நிலைகொண்டு இருப்பதற்கான சாத்திய கூறுகள் காணப்படுகின்றன. அதன் உள் அர்த்தம் தெற்கு மக்களை இராணுவத்துடன் சேர்த்து இங்கு குடியேற்றுவதே.

கிழக்கு மாகாணத்திலும் இதுதான் நடந்தது. அது தற்போது வடக்கிலும் நடைபெறவுள்ளது. இதனை எம்மால் தடுக்க முடியாது. இதனை உலக நாடுகளே தடுத்து நிறுத்தி எமக்கு விடிவை தரவேண்டும்.

மக்களின் வாழ்விடங்களை பிடிச்சு வைத்து கொண்டு விவசாயம், மீன்பிடி, கடை என இராணுவம் தொழில் செய்கின்றது.

இங்குள்ள மக்கள் வறிய நிலையில் வாழ்கின்றனர். தொழில் வாய்ப்புக்கள் இன்றி கடன் சுமையுடன் வாழ்கின்றனர். அவ் மக்களின் தொழில்களை இராணுவம் செய்கின்றது என சந்திப்பின் போது அவருக்கு எடுத்து கூறினேன்.

அவர் எமது பிரச்சனைகளை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்து இயம்புவதனால் ஐக்கிய நாடுகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும். இதனால் எமக்கு நன்மைகள் கிடைக்கும் என தான் எதிர்பார்ப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட ஐ.நா. சிறப்பு பிரதிநிதி சாலோக பொயனி முன்னதாக வடமாகாண ஆளுநர் G.A.சந்திரசிறியையும் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்


Similar posts

Comments are closed.