விண்வெளி ஆராய்ச்சி: இந்தியாவுடன் இணையும் சீனா

Written by vinni   // December 3, 2013   //

Flag of the People's Republic of Chinaவிண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சந்திரனில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக சீனா தயாரித்துள்ள முதல் ஆளில்லா விண்கலமான சாங் இ-3 திங்கள்கிழமை அதிகாலை 56.4 மீட்டர் உயரமுள்ள லாங் மார்ச்- 3பி ராக்கெட்டின் மூலம் ஷிசாங் விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் பூமியிலிருந்து விலகி செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது 300 நாள் பயணத்தைத் தொடங்கியதற்கு மறுநாள் சீனாவின் இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது.

சாங் இ-3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சீன விண்வெளி விஞ்ஞானிகள் விண்வெளி தொடர்பான விவகாரங்களில் மற்ற நாடுகளுடன் குறிப்பாக அண்டை நாடான இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சந்திர விண்கலத் திட்டத்தின் தலைமைத் துணை கமாண்டர் லீ பென்ஜாங் ஊடகங்களிடம் கூறுகையில், “சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி எந்தப் போட்டி நோக்கத்தோடும் செய்யப்படவில்லை. சந்திர விண்கலத் திட்டம் தொடர்பாக பிற நாடுகளின் ஒத்துழைப்பை வரவேற்கிறோம். மனித மேம்பாட்டுக்காக விண்வெளி தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

சாங் இ-3 விண்கலம், பூமி-சந்திரனின் சுற்றுப்பாதையில் திட்டமிட்டபடி நுழைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விண்கலம், டிசம்பர் மாத மத்தியில் சந்திரனில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, அமெரிக்காவும், முன்னாள் சோவியத் யூனியனும்தான் சந்திரனில் தரையிறங்கும் விண்கலத்தை அனுப்பின. தற்போது அந்த வரிசையில் சீனாவும் இணைந்துள்ளது.


Similar posts

Comments are closed.