இலங்கை மனித உரிமை நிலைமையில் கனடா மிக அதிருப்தி

Written by vinni   // December 3, 2013   //

Deepak-Obhraiபொதுநலவாய மாநாட்டில் கனடிய பிரதிநிதியாக சென்ற வெளிவிவகார அமைச்சின் பாராளுமன்றச் செயலர் தீபக் ஒபரோய் தமிழ் பிரதிநிதிகளுடன் ஒரு பகிர்வு.

பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவதற்கு கனடியப் பிரதமர் மறுத்துவிட்ட நிலையில், கனடாவில் சார்பில் இலங்கை சென்று திரும்பிய கனடிய வெளியுறவு அமைச்சின் பாராளுமன்றச் செயலாளர் தீபக் ஒபரோய் அவர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து தனது இலங்கை பயணம் பற்றிய விடயத்தில் அதிருப்தியை வெளியிட்டார். இச்சந்திப்பின் பின்னர் தமிழ் ஊடகங்களுக்கு ஒரு மாநாட்டை நடாத்தி இலங்கையின் மனித உரிமை நிலை, பொறுப்புக்கூறல், இனங்களுக்கான ஒருமைப்பாட்டில் ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டார்.

கடந்த சனிக்கிழமை, நவம்பர் 30ஆம் திகதி, ரொறன்ரோ நகரில் இந்த முக்கிய சந்திப்பும், ஊடக மாநாடும்; இடம்பெற்றன.

பொதுநலவாய மாநாட்டிற்காக இலங்கை சென்றிருந்த தீபக் ஒபரோய் அவர்கள், அங்கு சமூகப் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், யாழ் கத்தோலிக்க ஆயர், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், வடமாகாண முதலமைச்சர் உட்பட, பல்வேறு சந்திப்புக்களிலும் கலந்து கொண்டதை, கனடியத் தமிழ் மக்களிடம் விளக்கினார்.

யாழ்ப்பாணம் செல்வதற்கு தான் விரும்பியபோது, அதற்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், அங்கு செல்வது சிரமம் என்று சிறீலங்கா அரசு மறுத்துரைத்த போதும், தாம் தரைவழியாகப் பயணிக்க அனுமதிபெற்று, 8 மணிநேரம் பயணித்து யாழ் சென்று தமிழ் மக்களின் வாழ்க்கையை நேரில் பார்த்து அறிந்து கொண்டதாகத் தெரிவித்த ஒபரோய் அவர்கள், அங்கு மக்கள் மிகவும் பயம்நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்வதை தான் அவதானித்ததாகக் கூறினார். மீள்கட்டுமானம், மீள்குடியேற்றம், வாழ்வாதாரத்தில் எழுச்சி போன்ற எதனையும் தான் கண்டுகொள்ள முடியாமை தனக்கு வருத்தம் தருவதாகத் தெரிவித்த அவர், சர்வதேச சமூகம், சிறீலங்காவிடம் இதுகுறித்து போதிய மாற்றங்களைக் கோரும் என்றும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே சுதந்திர விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ள கனடா, தொடர்ந்தும் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கும் என்று உறுதியளித்த ஒபரோய், வருகிற வருடம் ஜெனீவாவில் சிறீலங்கா குறித்த விவாதம் எழும்போது, அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் உட்பட, தொடர்ந்தும் மக்களின் வாழ்விடங்கள் மீள வழங்கப்படாமை, ஊடக சுதந்திரமின்மை, தொடரும் படுகொலைகள், பாதுகாப்பற்ற சூழல், மக்கள் அச்சத்துடன் வாழ்கின்ற சூழ்நிலை போன்ற பல்வேறு விடயங்களிலும் முன்னேற்றம் உள்ளதா என்ற கேள்வியை கனடா முன்வைக்கும் என்று தெரிவித்தார்.

தான் முதலாவது தடவையாக சுனாமி பேரழிவிற்குப் பின்னரும், இரண்டாவது தடவை, 2009ல் போர் முடிவுற்ற சூழ்நிலையிலும், தற்போது பொதுநலவாய மாநாட்டிற்காக மூன்றாவது தடவையாகவும் இலங்கை சென்று வந்துள்ளதை நினைவுகூர்ந்த ஒபரோய், அங்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம் மக்கள் அனைவரும் இலங்கை அரசில் அதிருப்தி கொண்ட நிலை இருப்பதை தான் அவதானித்ததாகவும், பிரதம நீதியரசர் சிராணியை பதவி நீக்கம் செய்தமை, ஊடகவியலாளர்கள் படுகொலை, ஊடக நிலையங்கள் மீதான தாக்குதல்கள், ஜனநாயக விரோத மற்றும் அச்சுறுத்தல் சூழ்நிலைகள் போன்றவற்றை நேரில் பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்டதுடன், அது குறித்து கனடா போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கூறினார்.

கனடிய வெளியுறவு அமைச்சின் பாராளுமன்றச் செயலாளர் தீபக் ஒபரோய் அவர்கள், தமிழ் மக்கள் பிரதிநிதிகளை ரொறன்ரோவில் சந்தித்தபின் ஊடகவியலாருக்கு வழங்கிய மாநாட்டின் போது, அவர் வழங்கிய உரையையும் நிருபர்களின் வினாக்களுக்கு அவர் வழங்கிய பதில்களையும், இங்கேயுள்ள ஒளிக்காட்சி வடிவங்களில் காணலாம்.


Similar posts

Comments are closed.