தென் ஆப்ரிக்க சுற்றுத்தொடர் சவால் மிக்கது: டோனி

Written by vinni   // December 2, 2013   //

Mahendra-Singh-Dhoni_12டோனி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுகிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வருகிற ஐந்தாம் திகதி ஜோகனஸ்பர்க்கில் நடக்கிறது.

இதையொட்டி இந்திய அணி நேற்று நள்ளிரவில் மும்பையில் இருந்து தென் ஆப்ரிக்கா புறப்பட்டது.

இதன்போது செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட இந்திய அணித்தலைவர் டோனி, சச்சின் டெண்டுல்கரின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியின் முதல் பயணம் இதுவாகும். குறிப்பிட்ட வீரர் ஓய்வு பெறும் போது எப்போதுமே அது புதிய தொடக்கமாகத் தான் இருக்கும்.

நமது அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் டெஸ்டை விட ஒருநாள் போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த தொடர் எல்லா வீரர்களுக்கும் புதிய சவாலாகும். இங்கு பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.

அது மட்டுமின்றி வெளிநாடு தொடர்கள் எப்போதுமே சவால் மிக்கவை. குறிப்பாக பந்து வீச்சாளர்கள் சரியான திசையில், எகிறும் (பவுன்ஸ்) ஆடுகளங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஒருநாள் போட்டியுடன் இந்த சுற்றுப்பயணத்தை தொடங்குவது நல்ல விஷயமாகும். துடுப்பாட்டக்காரர்கள் இதில் சிறப்பாக விளையாடி அதன் அனுபவத்தின் துணையுடன் அடுத்து வரும் டெஸ்ட் தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும், ஷிகர் தவானும் அருமையாக விளையாடி வருகிறார்கள். எனவே இப்போதைக்கு எங்களது 3-வது தொடக்க ஆட்டக்காரர் பரிசீலனையில் தான் கவுதம் கம்பீர் இருக்கிறார். ஆனால் அவர் அணியில் இடம் பெறவில்லை என்பதை அறிவேன்.

டெஸ்ட் அணியில் டெண்டுல்கர் ஆடிய 4-வது வரிசையில் யார் இறங்குவார் என்று கேட்கிறீர்கள். அது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் அவரது இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. ஒரு வேளை துடுப்பாட்ட வரிசையில் 4-வது இடத்தை நீக்கிவிட சாத்தியக்கூறு இருந்தால், 1, 2, 3, 5, 6 என்று 12-வது வரை துடுப்பாட்ட வரிசையை நீட்டிக்க முயற்சி செய்வோம்.

கடந்த சில ஆட்டங்களில் எங்களது பந்து வீச்சில் நிறைய முன்னேற்றம் அடைந்து உள்ளோம். ஆனால் மேலும் எப்படி முன்னேற்றம் காண்பது என்பதை பார்ப்போம்.

கடைசி 10 ஓவர்களில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுப்பதை கட்டுப்படுத்த முயற்சிப்போம். இது புதிய சீதோஷ்ண நிலை. இங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உகந்தவை. யார்க்கராக வீசுவதுடன், பவுன்ஸ் தன்மையையும் பந்து வீச்சாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே பந்து வீச்சு எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் கவனிக்க வேண்டும்.

உலக தரவரிசையில் இரண்டு அணிகளும் நல்ல நிலையில் இருக்கிறது. ஒரு நாள் போட்டி தரவரிசையில் நாங்கள் முதலிடத்தில் உள்ளோம்.

டெஸ்ட் தரவரிசையில் தென் ஆப்ரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. எனவே இந்த தொடர் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கப் போகிறது.

ஆனால் இங்குள்ள சூழலுக்கு ஏற்ப வெகுவிரைவில் மாற்றிக் கொள்வதே முக்கியமான அம்சமாக இருக்கும் என டோனி மேலும் தெரிவித்தார்


Similar posts

Comments are closed.