அவசரமாக டில்லிக்கு பயணமாகிறார் பஸில்

Written by vinni   // December 2, 2013   //

pasilஇந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவராக அமைச்சர் பஸில் ராஜபக்ச டில்லிக்குச் செல்லவுள்ளார்.    பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் இந்தியப் பயணத்தையும், பிரதமர் மன்மோகன் சிங்கின் யாழ். வருகையையும் டில்லி இராஜதந்திர வட்டாரங்கள் நேற்று உறுதிப்படுத்தின.

வடக்கு முதலமைச்சரின் அழைப்பின் பிரகாரம் பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணத்துக்கு வருவதற்குத் திட்டமிட்டுள்ளார் என்றும், ஆனால், அதற்கான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் தமிழக காங்கிரஸின் தலைவர் ஞானதேசிகன் நேற்றுத் தெரிவித்தார்.    அதேவேளை, இந்திய மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரமும் பிரதமரின் யாழ். பயணத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.   இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணித்த இந்தியப் பிரதமர்,  கடுந்தொனியிலான செய்தியுடன் இலங்கை வருவதற்கு திட்டமிட்டுள்ள நிலையிலேயே அவரை சாந்தப்படுத்தும் நோக்கில் இலங்கை ஜனாதிபதி தனது சகோதரரான அமைச்சர் பஸிலை தூதனுப்புகிறார் என்று தெரியவருகின்றது.    13ஆவது திருத்தம், அரசியல் தீர்வு விடயம் உட்பட சில விடயங்களில் இந்தியாவுக்கு வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு டில்லித் தரப்பால் முன்வைக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது.

இந்த நிலையில், 13ஆவது திருத்தம், அரசியல் தீர்வு விவகாரம் உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் அமைச்சர் பஸில், இப்பயணத்தின்போது முக்கிய சில உறுதிமொழிகளை வழங்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.    எனினும், அமைச்சர் பஸிலின் இந்தியப் பயணம் தொடர்பிலான விவரத்தை இலங்கை அரசு இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திடீர் பயணத்தை மேற்கொண்ட பாணியிலேயே இவரும் செல்வார் என்று கூறப்படுகின்றது.   இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான குர்´த், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பிரதமர் அலுவலக முக்கியஸ்தர்கள் உட்படப் பல தரப்பினரையும் அமைச்சர் பஸில் இப்பயணத்தின்போது சந்தித்துப் பேசுவார் எனவும் அறியமுடிகின்றது.


Similar posts

Comments are closed.