‘யுத்தகால இழப்புகள் பற்றிய பதிவுகள் நம்பகரமாக இல்லை’

Written by vinni   // December 2, 2013   //

Internally displaced people (IDP) wait for police to search their bus at a checkpoint on the A-9 road in Vavuniyaஇலங்கையில் கடந்தகால போர் சூழலில் இடம்பெற்ற இழப்புக்கள் குறித்த பதிவுகளைப் பொதுமக்களிடம் இருந்து திரட்டுவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் நம்பகரமாக இல்லையென்று வடமாகாண மக்கள் சிலர் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் பிபிசி மேலும் தெரிவித்திருப்பதாவது,

‘கடந்த 1982 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையிலான 27 வருட காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்புக்கள், உடல் ரீதியாக ஏற்பட்டுள்ள காயங்கள், அவயவங்களின் இழப்புக்கள், சொத்துக்களுக்கு எற்பட்டுள்ள அழிவுகள், விவசாயம் உள்ளிட்ட தொழில்துறை மற்றும் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து, திடீரென அறிவித்து சுமார் இரண்டு வார காலப்பகுதிக்குள் தகவல்களைத் திரட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வார காலத்தில் இப்படியான பணியை பூர்த்திசெய்வதில் சிரமங்கள் இருப்பதாக சில ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

காலம் கடந்தாவது போர்க்கால இழப்புக்களைத் திரட்டுவதற்கு அரசாங்கம் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இத்தகைய தகவல்களைத் திரட்டியதன் பின்னர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடுகளை வழங்குமா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கின்றது.

இந்தப் பதிவுகளை மேற்கொள்வதற்காக கிராமசேவை அலுவலகர்கள் மட்டத்தில் சில இடங்களில் வீடுகளுக்கு அதிகாரிகள் சென்று தகவல்களைத் திரட்டி வருகின்றார்கள்.

சில இடங்களில் கிராமசேவை அதிகாரியின் அலுவலகத்திற்குப் பொதுமக்களை அழைத்து தகவல்கள் திரட்டப்படுகிறது.

ஆயினும் இரண்டு படிவங்களில் பெரும் எண்ணிக்கையான கேள்விகளின் ஊடாகத் தகவல் திரட்டப்படுவதனால், ஒரு குடும்பத்தின் தகவலைப் பெறுவதற்கு சுமார் அரை மணித்தியாலம் செலவிட வேண்டியிருப்பதனால், குறுகிய காலத்தினுள் இந்தத் தகவல்களைத் திரட்டுவது கடினமான காரியமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

குடும்பம் ஒன்றில் அனைவரும் உயிரிழந்திருந்தால், அந்தக் குடும்பத்தின் பதிவுகள் மேற்கொள்ளப்படமாட்டாது என்று புள்ளிவிபரவியல் தொகை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டிபிள்யூ.டி.குணவர்தன தெரிவித்திருக்கின்றார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தில் எவரும் உயிருடன் இல்லாத காரணத்தினால் அந்தக் குடும்பத்தைக் கணக்கெடுக்க முடியாது என அவர் கூறியிருக்கின்றார். இதேபோன்று குடும்பத்தில் எவரும் உயிருடன் இல்லாமல் அனைவரும் உயிரிழந்திருந்தால், அந்தக் குடும்பங்கள் கணக்கில் எடுக்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இவை குறித்து சில மாகாணசபை உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் போர்க்காலத்தில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை அரசாங்கம் மதிப்பீடு செய்யும் என்று எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்’ என பிபிசி மேலும் தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.