திருமணத்தன்று மணவறைக்கு செல்லாமல் பிணவறைக்கு சென்ற மணமகன்

Written by vinni   // December 1, 2013   //

dead_body_சிவகங்கை மாவட்டத்தில் திருமண நாள் அன்று மணமகன் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகன் மணிகண்டன் (27). இவர் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் பொலிசாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் இன்று லாடனேந்தலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது.

திருமணத்திற்காக இரு வீட்டாரும் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து கொண்டிருந்தனர். மணப்பெண் வீட்டார் நேற்று இரவே பெண்ணுடன் லாடனேந்தல் திருமண மண்டபம் சென்று விட்டனர். இரவில் அங்கு தங்கிய அவர்களுக்கு மாப்பிள்ளை வீட்டார் தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர்.

திருமணத்தையொட்டி நேற்று இரவே மண்டபம் களை கட்டி காணப்பட்டது. வானவேடிக்கைகள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் என மண்டபம் முழுவதும் சந்தோசம் பொங்கி வழிந்தது.

அதே சந்தோசத்துடன் திருமண வீட்டார் இரவில் படுத்து தூங்கினர். இன்று காலை திருமணம் என்பதால் நள்ளிரவிலேயே மண்டபத்தில் சமையல் பணி தொடங்கியது. அதிகாலை நேரத்தில் மண்டபத்தில் தங்கி இருந்த பெண் வீட்டாரும் எழுந்து குளிக்க புறப்பட்டனர். அப்போது மண்டபத்தில் இருந்த தண்ணீர் மோட்டார் இயங்கவில்லை.

இதனால் அங்கு தண்ணீர் வராததால் மணப்பெண் வீட்டார் மண்டபத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மணமகன் வீட்டாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கும் அனைவரும் திருமணத்திற்கு தயாராகி கொண்டு இருந்ததால் மணமகன் மணிகண்டன் தான் சென்று பார்த்து வருவதாக கூறினார்.

ஆனால் உறவினர்கள் வேண்டாம் என்று தடுத்து உள்ளார்கள். இருப்பினும் மணமகன் மணிகண்டன் தான் மோட்டார் சைக்கிளில் 5 நிமிடத்தில் சென்று திரும்பி விடுவேன் என்று கூறிவிட்டு புறப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் அவர் மண்டபத்தின் அருகே சென்றபோது அந்த வழியே மதுரையில் இருந்து பரமக்குடிக்கு காய் கறி ஏற்றி சென்ற வேன் எதிர்பாராதவிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் மணமகன் மணிகண்டன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததில் அதன் பெட்ரோல் டேங்க் திடீரென வெடித்து தீ பிடித்தது.

இந்த தீ மணமகன் மணி கண்டன் மீது வேகமாக பரவியது. மோட்டாரை சரி பார்க்க மணமகனே வந்து விட்டார் என மகிழ்ச்சியில் திளைத்த உறவினர்கள் கண் முன்பு அவர் தீப்பிடித்து எரிய அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். என்ன நடந்தது என்பதை அறிவதற்குள் மணமகன் மணிகண்டன் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

பெண் வீட்டாரும் திருமணத்திற்கு வெளியூர்களில் இருந்து வந்திருந்தோரும் மணமகன் தீயில் எரிந்து பலியான சம்பவம் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து திருப்புனம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து வேன் ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணத்தன்று, திருமண மண்டபத்தின் முன்பே மணவறையில் இருக்க வேண்டிய மணமகன் பலியானது திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியது.


Similar posts

Comments are closed.