ஜனாதிபதி செயலில் காட்ட வேண்டும்! மகிந்தவின் கூற்றுக்கு இரா. சம்பந்தன் பதில்!

Written by vinni   // December 1, 2013   //

Sampanthar-Mahinthar-150-newsவடக்கில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடமாகாண சபையோடு ஒத்துழைப்புடன் செயற்பட அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆனால் அதனை செயலில் காட்ட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரேட் லோச்சனை வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேசியபோது வடக்கு மக்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்திருநந்தார்.

இது தொடர்பில் இரா. சம்பந்தன் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

வடமாகாண சபை கடமைகளை நிறைவேற்ற அரசுடன் ஒத்துழைத்து செயற்பட நாம் தயாராக உள்ளோம். வடமாகாண சபை தேர்தல் முடிந்த கையோடு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்த்தது.

அதனடிப்படையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டார்.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நாம் இதனை மேற்கொண்டோம். அது மாத்திரமன்றி எமது நிலைப்பாட்டை நாம் செயல் மூலம் காட்டினோம். எனினும் தொடரும் சம்பவங்கள் மிகவும் கவலை அளிப்பனவாக உள்ளன.

யாழ்ப்பாணம், வலி. வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள பாடசாலைக் கட்டிடங்கள், இந்து ஆலயங்கள் என்பன உடைக்கப்பட்டு வருகின்றன. இதனை எமது மக்கள் எமக்கு முறையிட்டனர். இது மிகவும் மனிதாபிமானமற்ற செயற்பாடாகும்.

நான் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் நேரடியாகப் பேசினேன். அதற்கு அவர் அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதாகவும் இது குறித்து தனது செயலாளர் லலித் வீரதுங்கவுடன் பேசுமாறும் கூறினார். அத்துடன் இவ்வாறான செயல்கள் இனிமேல் தொடரமாட்டாது என்றும் உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுடன் தொடர்பு கொண்டு இவற்றை எடுத்துக் கூறினேன். அதற்கு அவர் வடமாகாண கட்டளைத் தளபதியிடம் இது தொடர்பில் அறிவிப்பதாகவும், இச் செயல்கள் உடன் நிறுத்தப்படும் எனவும் எனக்கு கூறினார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வீடுகளின் கூரைகள் பிரித்தெடுக்கப்படுவதுடன், யன்னல்கள் உடைத்தெடுக்கப்பட்டு கட்டிடங்கள் முற்றாக இடித்தழிக்கப்படுவதாக தெல்லிப்பழையிலிருந்து மக்கள் எனக்கு அறிவித்தார்கள்.

இது தொடர்பில் நான் ஜனாதிபதியின் செயலாளரின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு வந்தேன்.

இதேவேளை வலி.வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இந்து ஆலயங்கள் இடித்தழிக்கப்படுவதாகவும், காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியும் இடித்தழிக்கப்படுவதாகவும் வெளியான செய்தியை அடுத்து அதன் உண்மை நிலை குறித்து அறிய அப்பகுதிக்கு விஜயம் செய்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் படையினரால் திருப்பி அனுப்பப்பட்டார்.

இது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் உதவாது. இதனால் மக்கள் பெரும் விசனம் அடைந்துள்ளனர். வடமாகாண சபை இன்னமும் முறையாக இயங்கவில்லை.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் செயலாளரிடம் வடமாகாண சபையின் நிர்வாகக் கட்டமைப்பு குறித்து பேசிய போது பல வாக்குறுதிகளை எமக்கு வழங்கினார். அந்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

வடபகுதி மக்கள் அளித்த தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும். நோர்வே தூதுவருக்கு ஜனாதிபதி கூறியிருக்கும் விடயம் வரவேற்கத்தக்கதாகும். வடமாகாண சபையுடன் அரசாங்கம் ஒத்துழைத்துச் செயற்படுவதன் மூலமே மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

வடமாகாண சபையின் சீரான இயக்கத்தையே சர்வதேச சமூகம் எதிர்பார்த்துள்ளது. வடக்கில் இன்று நடைபெறும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.

வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் கட்டிடங்கள் உடைக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதேவேளை வடமாகாண சபையின் சீரான இயக்கத்திற்கு அரசாங்கம் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும். மக்கள் அச்சம், பீதி இன்றி வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். தொடரும் அச்சுறுத்தல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

இல்லையேல் நிலைமை மேலும் மோசமடையவே வழிவகுப்பதாக இருக்கும். அதுமாத்திரமன்றி புரிந்துணர்வு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழியே இல்லாமல் போய்விடும். மேலும் பொறுப்புக்கூறும் நிலையும் அதிகரித்துச் செல்வதாக இருக்கும்.

எனவே ஜனாதிபதி கூறுவது போன்று வடமாகாண சபையுடன் ஒத்துழைத்து செயற்படுவதை தாமதமின்றி துரிதமாக செயலில் காட்ட வேண்டும். அவ்வாறு செயற்படும் பட்சத்தில் நாம் தேவையான வகையில் ஒத்துழைத்து செயற்படத் தயாராக உள்ளோம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.