சென்னை காவல்துறையே 7 ஆண்டுகளாக எங்கிருந்தீர்கள்? கருணாநிதி

Written by vinni   // November 29, 2013   //

sIVAJIநடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை இப்போது ஆட்சேபிக்கும் சென்னை காவல்துறை, 7 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சிலையை வைத்தபோது எந்த நாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி சிவாஜி கணேசன் சிலை விவகாரம் குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில்.

கேள்வி: நடிகர் திலகத்தின் சிலையை அகற்ற வேண்டு மென்று அதிமுக.அரசின் காவல் துறை நீதிமன்றத்தில் தெரிவித்ததற்கு, திரை உலகைச் சேர்ந்தவர்களோ, நடிகர் சங்கத்தினரோ இதுவரை எதிர்ப்பே தெரிவிக்கவில்லையே?

பதில்: எதிர்ப்புத் தெரிவிப்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருந்திருக்காது. ஆனால் எதிர்ப்பைத் தெரிவித்து விட்டு, அதற்குப்பிறகு என்ன நடக்கும் என்பதைப் பற்றி அவர்கள் எல்லாம் யோசித்திருப்பார்கள்.

ஆனால் இப்போது அந்த இடத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் காவல் துறை, 2006ம் ஆண்டு அதாவது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சிலை வைக்கப்பட்ட போது எந்த நாட்டிலே வேலை பார்த்துக் கொண்டிருந்தது என்ற கேள்விக்கு மட்டும் பதில் தேவை.

கேள்வி: ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலுக்கு முதல்வரும் பிரச்சாரத்திற்காகச் சென்றிருக்கிறாரே?

பதில்: முதல்வர் உட்பட அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் ஒரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்காக பிரச்சாரத்திற்காக எப்போதாவது சென்றிருக்கிறார்களா?

கேள்வி: பேரறிவாளனுக்கு நியாயம் வழங்க வேண்டுமென்றும், அதைப்பற்றி முழு விசாரணை நடத்திட அரசு முன்வர வேண்டுமென்றும் கூறியிருந்தீர்கள் அதை எப்படி நடைமுறைப்படுத்த முடியும்?

பதில்: புலன் விசாரணை அதிகாரி தற்போது வெளியிட்டுள்ள தகவலுக்கு முன்பாக கடந்த சில ஆண்டுகளாகவே, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டுமென்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அறிக்கைகளும் விடுத்துள்ளேன்.

29-8-2011 அன்று நான் விடுத்த அறிக்கையில், இவர்கள் மூவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன். மீண்டும் 13-4-2013 அன்று நான் விடுத்த அறிக்கையிலும் இந்த வேண்டுகோளைத்தான் வலியுறுத்தியிருந்தேன். இதற்கிடையேதான் சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் தெரிவித்துள்ள கருத்துகள் மிகுந்த அதிர்ச்சியை நமக்குத் தந்தன.

தான் செய்த தவறுக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் காவல் துறை அதிகாரி “பாவ மன்னிப்பு” கோரியிருக்கிறார்.

ஆனால் அந்த இளைஞனின் 22 ஆண்டுக் கால வாழ்க்கையை யாரால் திருப்பிக் கொடுக்க முடியும்? ஒருவேளை இந்த இடைவெளியில் அவர் தூக்குத் தண்டனைக்கு ஆளாகியிருந்தால், அந்த இளைஞனைப் பெற்ற தாய்க்கு நாம் எப்படி ஆறுதல் கூறியிருக்க முடியும்.

காவல் துறை அதிகாரியின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, தமிழகத்திலே உள்ள பெரும்பாலான கட்சிகள் பேரறிவாளனை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கின்றன.

பேரறிவாளனைப் பெற்ற தாயாரும் அந்த வேண்டுகோளை கண்ணீரோடு வைத்திருக்கிறார். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, இனியாவது அந்த வாலிபனுக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.