போர் காலத்தின் போது ஏற்பட்ட‌ மொத்த உயிர் இழப்புகள்,உடைமை மற்றும் சொத்து இழப்புகள் தொடர்பாக பொது கணக்கெடுப்பு

Written by vinni   // November 28, 2013   //

இலங்கையில் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொண்டார். அப்போது, தமிழர்கள் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது, தமிழர்கள் போரின் போது பட்ட அவதிகளையும், கொடுமைகளையும், ராணுவ அத்துமீறல்களையும் கதறிய படி அவரிடம் எடுத்துரைத்தனர். காணாமல் போன தங்களது குடும்பத்தினர் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்றும் கண்ணீர் வடித்தனர்.

அதை தொடர்ந்து காமன்வெல்த் மாநாட்டில் பேசிய கேமரூன், இறுதிக்கட்ட போரின் போது நடந்த தமிழர்கள் படுகொலை குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தது. போரின் போது அத்துமீறல்கள் நடைபெற வில்லை என கூறியது.

இந்த நிலையில், நேற்று லண்டன் பத்திரிகைக்கு பேட்டி அளித்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், நான் இலங்கையின் வடக்கு மாகாணம் சென்று திரும்பி ஒரு வாரம் ஆகவிட்டது. ஆனாலும், அங்கு பார்த்த காட்சிகள் இன்னும் என் மனதில் நிழலாடுகின்றன.

முதலில் தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான ஒளிவு மறைவற்ற சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்த போது அடுத்த மாதத்துக்குள் சர்வதேச விசாரணை தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். விசாரணை தொடங்காவிட்டால் நாங்கள் ஐ.நா. மூலமாக அத்தகைய விசாரணையை கேட்போம் என அவரிடம் தெளிவாக கூறிவிட்டேன்.

இலங்கையில் மனித உரிமை விஷயத்தில் முன்னேற்றம் வேண்டும். உண்மையான கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் நிலவ வேண்டும். தமிழர் – சிங்களர் இடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்று கூறினார்.

Sri Lanka Civil Warஇந்நிலையில்,இலங்கை அரசு தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுவரை தமிழர்கள் மற்றும் இலங்கை ராணுவ வீரர்கள் என மொத்தம் 5 ஆயிரம் பேரை காணவில்லை என்று போர் காலத்தின் போது காணாமல் போன நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்த அரசு அமைத்த 3 நபர் கமிஷனிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

1983-ம் ஆண்டிலிருந்து மே-2009 வரை ஏற்பட்ட மொத்த உயிர் இழப்புகள்,உடைமை மற்றும் சொத்து இழப்புகள் தொடர்பாக நாளை(28-ம் தேதி) முதல் நாடெங்கிலும் உள்ள 14 ஆயிரம் கிராமங்களில் பொது கணக்கெடுப்பு நடத்தப்படும்.

போரின் போது மரணம் அடைந்தவர்கள்,உடல் உறுப்புகளை இழந்தவர்கள்,காயம் அடைந்தவர்கள்,சொத்துகளை இழந்தவர்கள் தொடர்பான் விபரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும்.
இந்த கணக்கெடுப்பை நிறைவு செய்ய 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.