சிறிலங்கா அரசையும் விடுதலைப் புலிகளையும் ஒரே தட்டில் போடும் ஓர் அணுகுமுறை தவறானது

Written by vinni   // November 28, 2013   //

uruthirakumar-1இலங்கைத்தீவில் நடந்த போரில் போர்க்குற்றம் குறித்து சிறிலங்கா அரசையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஒரே தட்டில் போடும் அனைத்துலக சமூகத்தின் அணுகுமுறை தவறானதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூ யோர்க் நகரில் இடம்பெற்றிருந்த மாவீரர் நாளில் ஆற்றிய உரையிலேயே இக்கருத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் முன்வைத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு குறித்த நீதி கோரும் விடயத்தில் சிங்களம் மேற்கொண்டதும் தொடர்ந்து மேற்கொள்வதும் மனித உரிமை மீறல்களோ அல்லது போர்க் குற்றங்களோ மட்டுமன்றி தமிழர் தேசத்தின் மீதான இனஅழிப்பே என்பதற்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவைத் திரட்டுதல் முக்கியமானது ஆகும் எனத் தெரிவித்த பிரதமர் வி.உருத்திரகுமாரன், இவ் விடயத்தில் போர்க்குற்றம் குறித்து சிறிலங்கா அரசையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஒரே தட்டில் போடும் ஓர் அனைத்துலக சமூகத்தின் அணுகுமுறை தவறானதெனத் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசு திட்டமிட்ட முறையில் இனஅழிப்பை ஓர் செயற்திட்டமாக வகுத்து நடைமுறைப்படுத்தியது. இப்போதும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன. இத்தகையதொரு இனஅழிப்பை ஏனைய அரசுகள் ஒரு முரண்பாட்டுத் தீர்வு அணுகுமுறையாக தமது நாடுகளில் எதிர்காலத்தில் பயன்படுத்தாது தடுக்க வேண்டியதொரு கடமையும் அனைத்துலக சமூகத்துக்கு உண்டு. இதனால் சிறிலங்கா மீதான இனஅழிப்பு குறித்த அனைத்துலக விசாரணையும் அதற்குரிய தண்டனையும் நீதி கோரும் விடயத்தில் முக்கியமானவை ஆகும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்தார்.

இனஅழிப்பில் இருந்து தமிழ் மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் தனியான அரசொன்றினை அமைத்துக் கொள்ளுதலுக்கான அங்கீகாரமும் அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியதெனவும் அவர் தெரிவித்திருந்தார்.


Similar posts

Comments are closed.