மாகாண சபை உறுப்பினர்களின் வீட்டின் மீது கல் வீச்சு

Written by vinni   // November 28, 2013   //

Untitled-1-copy9வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் வீட்டின் மீது இன்று (28) அதிகாலை கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.யாழ்.திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டின் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் கல் வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஐங்கரநேசன்,

மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளின் மீது தொடர்ந்தும் அரசு தாக்குதலை நடாத்தினால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் பாதையை தோற்றுவிக்கும்.

இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் வீட்டின் வாசல் பகுதியில் நின்று வீட்டின் மீது கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டனர். இதில் வீட்டு யன்னல் கண்ணாடிகள் சில சேதமடைந்தன. மாவீரர் நாளை முன்னிட்டு நேற்று மர நடுகை நிகழ்வை மேற்கொண்டதன் பின்னணியில் தான் இத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்று இருக்கலாம்.

இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளின் மீது தொடர்ந்தும் அரசு தாக்குதலை நடாத்தினால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்

இது ஒரு சகிக்க முடியாத காட்டுமிராண்டி தனமான நாகரிகமற்ற செயல் எனவும் இது தொடர்பாக கோப்பாய் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். கல் வீச்சு தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் கரவெட்டி பிரதேச தவிசாளர் வீடு, வல்வெட்டித்துறை உபதவிசாளர் வீடு, வலி.மேற்கு தவிசாளர் வீடு, மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வீடு என கடந்த இரு தினங்களில் யாழில் மக்கள் பிரதிநிதிகள் பலரின் வீடுகளின் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

அதே வேளை இன்று அதிகாலை மாகாண சபை உறுப்பினர் ஆனோல்டின் குருநகரில் அமைந்துள்ள வீட்டின் மீதும் கல் வீச்சு தேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்


Similar posts

Comments are closed.