‘லெகர்’ புயல் நாளை ஆந்திராவை தாக்கும்

Written by vinni   // November 27, 2013   //

Vietnam Asia Typhoonவங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே உருவான லெகர் புயல் அதி தீவிர புயலாக உருவெடுத்து ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை அது அந்தமானின் போர்ட்பிளேர் நகரில் இருந்து 590 கி.மீ. தூரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவின் மசூலிப் பட்டினத்தில் இருந்து 760 கி.மீ தொலைவிலும், காக்கி நாடாவில் இருந்து 700 கி.மீ தொலைவிலும், கலிங்கப்பட்டினத்தில் இருந்து 670 கி.மீ தூரத்திலும் உள்ளது.

நாளை (வியாழக்கிழமை) பிற்பகலில் மசூலிப்பட்டினத்துக்கும் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே காக்கி நாடாவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 180 முதல் 200 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும், மிக கன மழை கொட்டும். எனவே பலத்த சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்துக்கு உட்பட்ட ஏனாம் பகுதி ஆந்திராவில் உள்ளது. இங்கும் லெகர் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.

ஆந்திராவின் கடலோரப் பகுதியில் உள்ள கிழக்கு–மேற்கு கோதாவரி மாவட்டங்கள், கிருஷ்ணா, விசாகப்பட்டினம், விஜய நகரம், ஸ்ரீகாகுளம், குண்டூர் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த மழை சேதம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களும், ஏனாம் பகுதியில் வசிக்கும் மக்களும் வெளியேற்றப்பட்டு புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் அடுத்தடுத்து ஆந்திராவை தாக்கிய பாய்லின், ஹெலன் புயல்களை விட லெகர் புயல் அதி தீவிரமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி நேற்று ஐதராபாத்தில் தலைமை செயலாளர் மொகந்தி மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு 7 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புயல் காற்று வீசும் போது கூரைகள் காற்றில் பறக்கும், மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழும் வாய்ப்பு உள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தகவல் தொடர்பும் துண்டிக்கப்படும்.

கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. கட்டு மரங்களையும், விசைப்படகுகளையும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

லெகர் புயல் நெருங்குவதால் இன்று மாலை முதல் ஆந்திராவில் பலத்த மழை பெய்யத் தொடங்கும். புயல் நெருங்க நெருங்க மழை மற்றும் காற்றின் தீவிரம் அதிகரிக்கும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் 1 மீ முதல் 1 ½ மீ உயரத்துக்கு எழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெகர் புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ராணுவத்தின் முப் படைகளும் வரவழைக்கப்பட்டு விசாகப்பட்டினத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள், கடற்படை படகுகளும் தயார் நிலையில் உள்ளது.

அவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறார்கள். இது தவிர தேசிய பேரிடர் மீட்பு படையின் 33 குழுக்களும் விசாகப்பட்டினத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

புயல் மீட்பு பணி அவசர உதவிக்காக ஐதராபாத் தலைமைச் செயலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப் படுபவர்கள் 040–23452144 மற்றும் 23451043 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தாக்கிய புயல்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ள நிலையில் லெகர் புயல் அவர்களை மேலும் துயரம் அடையச் செய்துள்ளது.


Similar posts

Comments are closed.