விடுதலைக்காக மூன்று பெரும் பரிமாணங்களில் செயலாற்றும் உறுதி பெறுவோம்! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்

Written by vinni   // November 27, 2013   //

v.uruthiraவிடுதலை, சுதந்திரம் என்ற உலகப் பெருவிழுமியங்களை தம் இதயத்தில் சுமந்து நின்று களமாடிக் காவியமாகி விட்ட நம் கார்த்திகைப்பூக்களின் நினைவு நாளி,ல் விடுதலையினை வென்றெடுக்க மூன்று பெரும் பரிமாணங்களில் நாம் அனைவரும் செயலாற்ற உறுதி கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்குள்ளாகிச் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழ தேசத்தின் வளங்கள் பெருமளவில் அழிக்கப்படுவதோ,டு தாயக மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், நமது மக்களின் விடுதலையை வென்றெடுக்க நமது மாவீரர்களின் கனவை நனவாக்க, நாம் முவ்வகை பரிமாணங்களில் நாம் நாம் செயலாற்ற வேண்டியவர்களாக உள்ளோம் எனத் தெரவித்துள்ளார்.
முதலாவது, ஈழத் தமிழர் மக்களின் தேசத் தகைமையும,; தாயகமும், சுயநிர்ணயமும் அனைத்துலக அங்கீகாரம் பெற உழைத்தல்.
இரண்டாவது, முள்ளிவாய்க்காலில் சிங்களம் புரிந்த இனஅழிப்புக்கு நீதி கோரும் போராட்டங்களை நடாத்துதல்.
மூன்றாவது, போரால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்புதலும் தமிழர் நிலைப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்தலும்.
இவை மூன்று பரிமாணங்களும் சமாந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டியவை எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், இவற்றில் ஈழத் தமிழ் மக்கள், தமிழகத் தமிழ் மக்கள் உட்பட்ட 80 மில்லியன் மக்களதும் பங்கு பற்றல் அவசியமானது ஆகும் எனவும் தெரவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது தமிழீழ தேசிய நாளான மாவீரர் நாள் செய்தியின் முழுவடிவம் :
விதையாய் வீழ்ந்த நம் வீரர்களின் நினைவோடு இப்புனித நாளில் விடுதலைக்காக மூன்று பெரும் பரிமாணங்களில் செயலாற்றும் உறுதி பெறுவோம்!
இன்று மாவீரர் நாள்.
நம் தேசப்புதல்வர்களின் திருநாள்.
தமது வீரத்தாலும் ஈகத்தாலும் நம் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்திய நாயகர்களின் பெருநாள்.
விடுதலை, சுதந்திரம் என்ற உலகப் பெருவிழுமியங்களை தம் இதயத்தில் சுமந்து நின்று களமாடிக் காவியமாகி விட்ட நம் கார்த்திகைப்பூக்களின் நினைவு நாள்.
நம் சின்னஞ் சிறு தமிழீழ தேசம் தனக்கென்றொரு அரசினை அமைத்து ஆனந்தமாய் வாழ வேண்டும் என்ற கனவுடன் நம் மண்ணில் விதையாய் வீழ்ந்த நம் வீரர்களை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் தம் நெஞ்சில் இருத்தி வணங்கும் புனித நாள்.
இந் நாளில் நம் மாவீரர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சிரம் தாழ்த்தி தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
மாவீரர்கள் மகத்தானவர்கள். வீரம் விளைந்தவர்கள். சுயம் களைந்தவர்கள். சுதந்திரவேட்கை மிகுந்தவர்கள். வரலாற்றை முன்னோக்கி நகர்த்தியவர்கள்.
தாம் கடப்பது நெருப்பாறு என்பதனை நன்கு தெரிந்திருந்தும் நமது மக்களுக்குச் சுதந்திரமான பாதுகாப்பான சுபீட்சமான வாழ்வை ஏந்தி வரும் பெருவிருப்புடன் களமாடியவர்கள்.
மாவீரர்கள் நடாத்திய போர் ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்ட போர் அல்ல. நிலத்தாசை கொண்டோ இராணுவ, பொருளாதார, வர்த்தக நலன்கள் கொண்டோ வழி நடாத்தப்பட்ட போரும் அல்ல. ஆயுதம் மீதோ அல்லது வன்முறை மீதோ காதல் கொண்டு எழுந்த போரும் அல்ல.
மாவீரர்கள் நடாத்திய போர் நமது தேசத்தின் இருப்புக்கான போர். நம் மக்களின் உயிர்ப்புக்கான போர். நம் தேசத்தின்மீது வரலாறு சுமத்திய போர். சிங்கள பேரினவாதப் பூதத்திடம் இருந்து நமது மக்களையும் மண்ணையும் பாதுகாப்பதற்கான போர். நமது தேசத்துக்கு அனைத்துலக சட்டம் வழங்கும் தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பதற்கான போர்.
தேசியத் தலைவர் சுட்டிக் காட்டியது போல சிங்கள ஆட்சியாளர்கள் உண்மையான பௌத்தர்களாக இருந்திருந்தால் மாவீரர்கள் ஆயுதம்தாங்கிக் குருதி சிந்திப் போராடும் வரலாற்றுத்தேவை நமது தேசத்துக்கு ஏற்பட்டிருக்காது.
அனைத்துலக சட்டம் உறுதி செய்யும் உரிமையை அரசுகளுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் வழங்கும் உலக ஒழுங்கு ஒன்று இருந்திருக்குமானால் தமது இன்னுயிர்களை ஈந்து மாவீரர்கள் களமாடவேண்டிய அவசியம் இருந்திருக்காது.
இலங்கைத்தீவின் மீதும் உலக அரங்கின் மீதும் அதிகாரம் செலுத்தியவர்கள் நீதிக்குத் தலைவணங்குபவர்களாக இருந்திருந்தால் மாவீரர்கள் போர்முரசு கொட்;ட வேண்டிய நிலை உருவாகியிருக்க மாட்டாது.
உண்மை என்பது அது உண்மை என்ற காரணத்துக்காக மட்டும் வெற்றி பெற்று விடுவதில்லை. நீதி என்பது அது நீதி என்ற காரணத்துக்காக மட்டும் வெற்றி பெற்று விடுவதில்லை. உண்மையையும் நீதியையும் போராடி வெற்றி பெற வைக்க வேண்டும் என்பார்கள்.
நம் மாவீரர்களும் உண்மை வெற்றி பெறவேண்டும் என்பதற்காக நீதி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகப் போராடினார்கள். ஈகம் என்ற சொல்லுக்கு அகராதியில் புதிய அர்த்தம் கொடுக்கும் வகையில் தம்முயிரைக் கொடுத்துப் போராடினார்கள்.
மாவீரர்களின் போராட்டம் நம் மண்ணில் நமக்கென ஒரு நிழல் அரசினை உருவாக்கியது. நம் சிறிய தேசம் மீது உலகின் கவனத்iதைத் திருப்பியது. ஈழத் தமிழ் தேசத்தின் தேசிய பிரச்சினையை அனைத்துலக பரிமாணம் கொண்டதொன்றாக மாற்றியது.
மாவீரர்கள் இன்று நமது தேசத்தின் விடுதலை வேட்கையின் குறியீடாக உள்ளார்கள். நம்மை இலட்சியம் நோக்கி வழி நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். நமது இதயக்கோவில்களில் குடியிருந்து கொண்டிருக்கிறார்கள். நமது தேசத்தின் பெருமைக்குக் காரணமாக அமைந்திருக்கிறார்கள்.
நம் மாவீரர் புகழ் தமிழர் வாழும் தரணியெங்கும் என்றும் நிலைத்திருக்கும்.
அன்பான மக்களே!
மாவீரர் தமது போராட்டத்தின் மூலம் கட்டியெழுப்பிய தமிழீழ நிழல் அரசு கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாகச் சிங்களத்தால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறது.
மாவீரர் துயிலும் இல்லங்களும் நினைவிடங்களும் சிங்கள ஆக்கிரமிப்புப் படையினரால் சிதைக்கப்பட்டிருக்கின்றன.
மாவீரர்களின் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சகோதரர்களுக்கும் உறவுகளுக்கும் மக்களுக்கும் மாவீரர்களுக்கு வணக்;கம் செலுத்தும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.
மாவீரர்கள் கட்டி வந்த தமிழீழ அரசு அனைத்துலக அரசுகளின் துணையுடன் சிங்களத்தால் ஆக்கிரமிக்கப் பட்டமையும் நமது தேசமெங்கும் சிங்கள இராணுவம் தமது அசிங்கக்கால்களை பரவ விட்டுள்ளமையும் நமது மனங்களில் சொல்லொணாப் பெருந்துயரைக் கொடுக்கிறது.
காலம் செல்லச் செல்ல மாவீரர் ஈகம் அர்த்தம் அற்றதாகப் போய்விடுமோ என்ற கலக்கத்தையும்
நம்மவர் பலருக்குக் கொடுக்கிறது.
இன்றைய மாவீரர்நாளில் மாவீரர்களது ஈகம் ஒருபோதும் வீண்போகாது என நாம் உரத்துச் சொல்வோம்.
மாவீரர்கள் நமது அரசியலின் காவல் தெய்வங்களாக நிலை பெற்றுள்ளார்கள். மாவீரர்களின் உயிர்மூச்சைக் காயப்படுத்தும் எந்த அரசியல் முடிவையும் தாயகத்திலோ அல்லது புலத்திலோ உள்ள அரசியல் தலைவர்கள் எவரும் எடுக்க முடியாத வகையில் ஈழத் தமிழர் அரசியலை மாவீரர்கள் காவல் காத்து நிற்கிறார்கள்.
இன்று ஈழத் தாயகத்தில் உள்ள இராணுவ ஆக்கிரமிப்புச் சூழலுக்கும் மக்கள் தமது உயிர்ப்பினை வெளிப்படுத்தி நிற்பதற்கும் மாவீரர்கள் ஆதார பலமாக உள்ளார்கள்.
மாவீரர்கள் நமது நினைவுகளில் இருக்கும் ஒவ்வொரு கணமும் அவர்களது இலட்சியத் தாகமும் நம் மனங்களில் எழும். நமது அரசியல் பெருவிருப்பாக சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு என்ற மாவீரர் கனவே நிறைந்திருக்கிறது.
மாவீரர் கனவை நனவாக்கும் பொறுப்பு இப்போது தமிழ் மக்கள் அனைவரதும் கைகளில் உள்ளது. ஈழத் தாயக மக்கள், புலம் பெயர் மக்கள், தமிழக மக்கள், ஏனைய நாடுகளில் உள்ள உலகத் தமிழ் மக்கள் என்ற வகையில் 80 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் கைகளில் இப்போது இந்தப் பொறுப்பு இருக்கிறது.
விடுதலைப் போரில் வித்தாகி வீழ்ந்த மாவீரர்களையும் தமது இன்னுயிர் ஈந்த மக்களையும் நினைவுகூரும் வகையில் நினைவுச்சின்னங்களையும் தூபிகளையும் உலகில் தமிழர் வாழும் பூமியெங்கும் அமைப்பது நமது இலட்சியவேட்கையினை உயிர்ப்பாக வைத்திருக்கப் பெரிதும் துணைபுரியும்.
இந்த வகையில் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்குப் பலம் சேர்க்கும் ஓர் அருஞ்செயலாகும். இதனை உருவாக்கக் காரணமாக இருந்த தலைவர்கள், முற்றத்தை உருவாக்கிய கலைஞர்களைப் பாராட்டுவதோடு அவர்களது கரங்களை தோழமையுடன் பற்றிக் கொள்கிறோம்.
முள்ளிவாய்க்கால் என்பது உலகத் தமிழ் மக்களின் கூட்டுநினைவுகளில் அழியாத இடத்தைப் பிடித்து இன்று நீதி கோரும் நமது போராட்டத்தின் குறியீடாக உள்ளது. இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் மக்களைத் திரளடைய வைக்கக்கூடிய சக்தி கொண்டதாக அமையும் என்பது திண்ணம்.
முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பூங்கா மற்றும் சுற்றுச்சுவர் தகர்க்கப்பட்ட செய்தி எமக்கு மிகுந்த துயரைத் தருகிறது. இது குறித்து நமது கவலையையும் கண்டனத்தையும் பதிவு செய்து கொள்கிறோம். நினைவாலயங்கள் சார்ந்த இடங்கள் எதுவும் அழிக்கப்படுவது காலம் ஆகிப் போனவர்களை அவமரியாதை செய்வது போலாகும் என்பதையும் மக்களின் ஆன்மாக்களைக் காயப்படுத்தும் செயலாகும் என்பதனையும் அரசு இயந்திரம் கவனத்திற் கொள்ள வேண்டும் என்றும் கோருகிறோம்.
அன்பானவர்களே!
நமது தேசம் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்குள்ளாகிச் சிதைக்கப்பட்டிருக்கிறது. நமது தேசத்தின் வளங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டிருக்கின்றன. நமது மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கிறது.
நமது மக்களின் விடுதலையை வென்றெடுக்க நமது மாவீரர்களின் கனவை நனவாக்க நாம் எத்தகைய பரிமாணத்தில் செயலாற்றப்போகிறோம்?
நமது மக்களின் விடுதலைக்கும் மகிழ்வான வாழ்வுக்கும் நாம் மூன்று பரிமாணங்களில் செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கிறோம்.
முதலாவது, ஈழத் தமிழர் மக்களின் தேசத் தகைமையும,; தாயகமும், சுயநிர்ணயமும் அனைத்துலக அங்கீகாரம் பெற உழைத்தல்.
இரண்டாவது, முள்;ளிவாய்க்காலில் சிங்களம் புரிந்த இனஅழிப்புக்கு நீதி கோரும் போராட்டங்களை நடாத்துதல்.
மூன்றாவது, போரால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்புதலும் தமிழர் நிலைப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்தலும்.
இவை மூன்றும் சமாந்திரமாக முன்னெடுக்கப்;பட வேண்டியவை. இவற்றில் ஈழத் தமிழ் மக்கள், தமிழகத் தமிழ் மக்கள் உட்பட்ட 80 மில்லியன் மக்களதும் பங்கு பற்றல் அவசியமானது ஆகும்.
ஈழத் தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமை என்பது தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானிப்பதற்கு நமது மக்களுக்குள்ள உரித்தைக் குறித்து நிற்கிறது. இது அனைத்துலகச் சட்டம் நமது மக்களுக்குத் தரும் உரிமை. ஆனால் நடைமுறையில் இவ் உரிமை பலம் வாய்ந்த அரசுகளின் நலன்கள் என்ற சமன்பாட்டை அடிப்படையாகக் கொண்டுதான் தீர்மானிக்கப்படுகிறது.
இதனால் இவ்விடையத்தில் நாம் இரண்டு தளங்களில் செயற்படவேண்டியுள்ளது.
முதலாவது தளத்தில், நாம் நமது நிலைப்பாட்டுக்குக் கருத்துரீதியான ஆதரவை வென்றெடுக்க வேண்டும். எந்தவொரு அரசியல் தீர்வு முயற்சியும் நாம் ஒரு தேசிய இனம் என்ற தகைமையை அங்கீகரித்ததாகவும், இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்குப் பகுதி தமிழர் தேசத்தின் பாரம்பரியத் தாயகம் என்பதனை ஏற்றுக் கொண்டதாகவும,;; இலங்கைத்தீவில் இரு அரசுகள் என்ற தீர்வுமுறையினை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்ற நிலப்பாட்டுக்கு அனைத்துலக அங்கீகாரம் திரட்டுவதற்கென நாம் அயராது செயற்படவேண்டும்.
இரண்டாவது தளத்தில் உலகின் வலுமிக்க அரசுகளது நலன்களையும் நமது நலன்களையும் உரிய நேரத்தில் பொருந்த வைக்கக்கூடிய வகையுடைய வெளியுறவுக் கொள்கையினை நாம் வகுத்து அதன் அடிப்படையில் இராஜதந்திரச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஈழத் தாயகத்தில் நாடு பிரியாத வகையில் ஓர் தீர்வுத் திட்டம் குறித்துத் தாயகத் தலைவர்கள் பேசுவது பற்றி நாம் அதிகம் கவலையடைய வேண்டியதில்லை. அவர்களுக்கு அதற்குரிய அரசியல்வெளியும் இல்லை. மேலும் எந்தவொரு தாயகத் தலைமையும் தமிழ் மக்களது ஆதரவை இழக்காத வகையில் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுமுறை எதற்;கும் சிங்களம் சம்மதிக்கப் போவதுமில்லை.
இரண்டாவது பரிமாணமாகிய முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு குறித்த நீதி கோரும் விடயத்தில் சி;ங்களம் மேற்கொண்டதும் தொடர்ந்து மேற்கொள்வதும் மனித உரிமை மீறல்களோ அல்லது போர்க் குற்றங்களோ மட்டுமன்றி தமிழர் தேசத்தின் மீதான இனஅழிப்பே என்பதற்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவைத் திரட்டுதல் முக்கியமானது ஆகும்.
இவ் விடயத்தில் போர்க்குற்றம் குறித்து சிறிலங்கா அரசையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஒரே தட்டில் போடும் ஓர் அணுகுமுறை அனைத்துலக சமூகத்திடம் காணப்படுகிறது.
இது தவறானதொரு அணுகுமுறையாகும்.
சிறிலங்கா அரசு திட்டமிட்ட முறையில் இனஅழிப்பை ஓர் செயற்திட்டமாக வகுத்து நடைமுறைப்படுத்தியது. இப்போதும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன.
மேலும் இத்தகையதொரு இனஅழிப்பை ஏனைய அரசுகள் ஒரு முரண்பாட்டுத் தீர்வு அணுகுமுறையாக தமது நாடுகளில் எதிர்காலத்தில் பயன்படுத்தாது தடுக்க வேண்டியதொரு கடமையும் அனைத்துலக சமூகத்துக்கு உண்டு.
இதனால் சிறிலங்கா மீதான இனஅழிப்பு குறித்த அனைத்துலக விசாரணையும் அதற்குரிய தண்டனையும் நீதி கோரும் விடயத்தில் முக்கியமானவை ஆகும்.
இதன் தொடர்ச்சியாக இனஅழிப்பில் இருந்து தமிழ் மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் தனியான அரசொன்றினை அமைத்துக் கொள்ளுதலுக்கான அங்கீகாரமும் அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியது.
நாம் செயற்படவேண்டிய முதல் இரண்டு பரிமாணங்களும் மிகுந்த சவால் மிக்கவை. அரசுகள் தமது நலன்கள் என்ற அச்சில் சுழல்வதுதான் இதற்கு அடிப்படைக் காரணம்.
தமிழர்கள் ஒரு வலுமையமாகத் தம்மை நிலைநிறுத்தும்போது அரசுகளின் நலன்சார் சமன்பாட்டில் மாற்றம் ஏற்படும்.
மூன்றாவது, மக்களின் மேம்பாடு குறித்தது. இதற்குத் தமிழர் நிலைப்பட்ட மேம்பாட்டு முயற்சிகளை நிறுவனமயப்படுத்தி வலுப்படுத்த வேண்டும். உதிரிகளாக நடைபெறும் முயற்சிகளை ஒழுங்கமைத்து நெறிப்படுத்த தாயகத்தில் வலுவுள்ளதொரு தமிழத் தேசிய மேம்பாட்டு அமைப்பினைத் தாயகத் தலைவர்கள் உருவாக்க வேண்டும். புலம் பெயர் மக்களும் தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களும் பங்கு கொள்ளக் கூடிய வகையில் ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.
இம் முயற்சிக்;கு சிறிலங்கா அரசு இடையூறாகவே இருக்கும். இருப்பினும் அனைத்துலக அழுத்தங்களைச் சரிவரப் பயன்படுத்தி இதனைச் சாத்தியப்படுத்த வேண்டியது இன்று அவசியமாயுள்ளது.
இம் மூன்று பரிமாணங்களிலும் நமது செயற்பாடுகளை அரசியல் இராஜதந்திர வழிமுறையின் ஊடாக விரித்துச் செல்வது நாம் சென்றடைய வேண்டிய நமது மாவீரரின் இலக்குக்கு வலுச் சேர்ப்பதாக அமையும்.
இப் பணிகளில் செயற்படும் அமைப்புகள் ஒவ்வொன்றும் ஏனைய அமைப்புக்களின் தனித்துவத்தையும் செயற்பாடுகளையும் மதித்துப் புரிந்துணர்வுடன் செயற்படுதலும் காலத்தின் தேவையாயுள்ளது.
அன்பான மக்களே!
நாம் சென்றடைய வேண்டிய இலக்கு எது என்பது நமக்குத் தெளிவாக தெரியும் அதேவேளை அவ் இலக்கு மிகவும் கடினமானதொன்று என்பதனையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இது கடினமான இலக்காக இருந்தாலும் இதுவே வரலாறு நமக்குத் தந்துள்ள தெரிவாக உள்ளது.
ஈழத் தமிழ் மக்கள் தமக்கென ஓர் அரசை அமைக்கத் தவறுவார்களானால் சிங்களத்தின் இனஅழிப்புக்குள்ளாவதைத் தவிர வேறு வழியேதும் எஞ்சப்போவதில்லை.
ஒரு பெரிய மலையுச்சி நோக்கி ஏறும் போது திக்கைச் சரியாகக் கணக்கிட்டு ஒவ்வாரு காலடியாக
முன்வைத்துச் செல்வது போல நாமும் எமது பயணத்தில் ஒவ்வொரு காலடியாக முன்னேறுவோம்.
இதற்குரிய ஆத்மபலத்தை நம் மாவீரர்கள் நம் எல்லோருக்கும் வழங்குவார்கள் என்பது திண்ணம்.
வாழ்க மாவீரர் புகழ்! மலர்க தமிழீழத் தனியரசு!!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என பிரதமர் வி.உருத்திரகுமாரனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.