மீண்டும் ராஜீவ்காந்தி கொலை விசாரணை?

Written by vinni   // November 26, 2013   //

Rajiv Gandhiமுன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கை சி.பி.ஐ. புதிதாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் நேற்று சி.பி.ஐ. இயக்குனரிடம் மனு அளித்துள்ளனர்.
ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யாமல் திருத்தம் செய்தேன் என்று சி.பி.ஐ.யின் முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் பேட்டி அளித்திருந்தார்.

இவரது இந்த தகவலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, என்.ராஜாராமன் மற்றும் எம்.துரைசெல்வன் ஆகியோர் மனு ஒன்றை டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் தாக்கல் செய்தனர்.

அதில் முன்னாள் சி.பி.ஐ. எஸ்.பி.தியாகராஜன் அளித்துள்ள பேட்டியின் அடிப்படையில் ராஜிவ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், முன்னாள் சி.பி.ஐ. எஸ்.பி.தியாகராஜன் தெரிவித்த தகவல் அடிப்படையில் ராஜிவ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்.

எஸ்.பி.தியாகராஜனை வரவழைத்து அவர் அளித்த வாக்குமூலத்தை சரிபார்த்து அதன் கூடுதல் விசாரணை விவரங்கள் அடங்கிய அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், இல்லையென்றால் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.