சென்னையில் கார் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முதல்வர்

Written by vinni   // November 25, 2013   //

rangasamy_caraccident_001சென்னையில் நடைபெற்ற கார் விபத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை சென்னை வந்தார்.

திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புதுச்சேரி திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்கு பாதுகாப்பாக பைலட் கார்கள் முன்னும் பின்னும் சென்று கொண்டிருந்தன.

மெரினா கடற்கரை சாலை வழியாக ரங்கசாமியின் கான்வாய் கார்கள் சென்று கொண்டிருந்தது. நேற்றிரவு 9.35 மணி அளவில் சாந்தோம் சர்ச் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த சொகுசு காரும் முதல்வர் ரங்கசாமியின் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பைலட் காரும் நேருக்கு நேர் மோதின.

அப்போது பின்னால் வந்த முதல்வர் ரங்கசாமியின் கார். முன்னால் சென்ற பைலட் கார் மீது வேகமாக இடித்து நின்றது. இதில் அவரது காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் நேருக்கு நேர் மோதிய பைலட் காரும், எதிரே வந்த காரும் பலத்த சேதம் அடைந்தது.

எனினும் இந்த விபத்தில் முதல்வர் ரங்கசாமி எந்தவித காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பைலட் காரில் பாதுகாப்புக்கு வந்த 4 பொலிசார் காயம் அடைந்தனர். ஒரு பொலிசாருக்கு கையில் பலத்த அடிபட்டுள்ளது. மற்றவர்கள் உயிர் தப்பினர், சொகுசு காரில் வந்தவர்களும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

காரில் வந்தவர் புதுச்சேரி முதல்வர் என்பதால் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பொலிசார் முதல்வர் ரங்கசாமியை காரில் இருந்து பாதுகாப்பாக இறக்கி மற்றொரு கார் மூலம் அவரை புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த பொலிசாரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Similar posts

Comments are closed.