வடமாகாண சபையில் பல்வேறு முட்டுக்கட்டைகள் – விக்னேஸ்வரன்

Written by vinni   // November 24, 2013   //

vikneswaran-sampanthanஇலங்கையின் வடக்கே, இரண்டு மாதங்களுக்கு முன்னர் உருவான வடமாகாண சபையில் தாங்கள் செயற்பட முடியாத வகையில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் அலுவலகத்தில் பணியாற்றுகின்ற அதிகாரிகளினாலேயே தங்களுக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கிக் கிளையைத் திறந்து வைப்பதற்காக வருகை தந்திருந்தபோதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் முதற்தடவையாக வருகை அந்த முதலமைச்சருக்கு வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினராலும், வவுனியா வர்த்தகர்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினராலும் வரவேற்பளிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் டக்ளஸுடன் அபிவிருத்தி இணைத் தலைமை நிர்வாகச் செயற்பாடுகளில் இராணுவத் தலையீடு இருப்பதாகக் குறிப்பிட்டு, முன்னாள் இராணுவ அதிகாரியாகிய ஆளுனர் சந்திரசிறிக்குப் பதிலாக சிவில் ஆளுனர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வடமாகாண சபையினால் ஏற்கனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் தாங்கள் பேச்சுக்கள் நடத்தியிருப்பதாகவும், அவர் ஜனாதிபதியிடம் பேசி ஒரு தீர்வு காண்பதாக உறுதியளித்திருப்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடமாகாண சபையினரும் புறக்கணித்திருந்த நிலையில் அந்தக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் முதலமைச்சரையும் ஜனாதிபதி நியமித்திருக்கின்றார்.

அதற்கான கடிதம் ஒன்று தமக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்து கிடைத்திருக்கின்றது என்பதை முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் ஒருங்கிணப்பு குழுக் கூட்டம் முதலமைச்சரின் தலைமையில் நடைபெற வேண்டிய நிலையில், மகிந்த சிந்தனை என்ற அரசியல் நோக்கங்களுக்காக இந்த இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.


Similar posts

Comments are closed.