ஒபாமா: இந்தியா செல்லமாட்டார்

Written by vinni   // November 22, 2013   //

obamaஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா செல்லமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, ஜனாதிபதி ஒபாமா கடந்த மாதம் மேற்கொள்ளவிருந்த ஆசியப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் அவரது அடுத்த ஆசியப் பயணம் குறித்த தகவலை, அந்நாட்டின் ஜனாதிபதி மாளிகையின் மூத்த அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். இருப்பினும் பயணத்திட்டம் குறித்த எவ்வித விவரங்களும் வெளியிடப்படவில்லை.

இதனிடையே, ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்நாட்டின் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சூசன் ரைஸ் கூறியதாவது:

பொருளாதார நெருக்கடியால் ஜனாதிபதியின் ஆசியப் பயணம் அக்டோபரில் ரத்து செய்யப்பட்டிருந்த போதிலும், ஒபாமா அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஆசிய நாடுகளுக்குச் செல்வார் என்ற அறிவிப்பு ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் உறவுகளை வலுப்படுத்தும்.

ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவது என்பது ஒபாமா நிர்வாக வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக உள்ளது. அந்தப் பிராந்தியத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும்.

ஆசிய நாடுகளில் நிரந்தரப் பாதுகாப்புக்கான சூழ்நிலைகளை உருவாக்குதல், தெளிவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துதல், சுதந்திரமான அரசியலை அமைத்தல், உலகளாவிய உரிமைகளைப் பெறுதல் போன்றவை அமெரிக்காவின் நோக்கம் என்றார்.

முன்னதாக அதிபர் ஒபாமா 2010ஆம் ஆண்டு நவம்பரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.