அரசு அதிகாரிகளே லஞ்சம் வேண்டுமா? பெங்களூர் செல்லுங்கள்

Written by vinni   // November 21, 2013   //

indian-rupees-moneyஅரசு அதிகாரிகளுக்கு அதிகம் லஞ்சம் கொடுத்த நகரங்களில் பெங்களூர் முதலிடத்தில் உள்ளது என்று இணையதளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த என்.ஜி.ஓ.வான ஜனகிரஹா ஊழலுக்கு எதிராக ஒரு இணையதளத்தை துவங்கியுள்ளது. www.ipaidabribe.com என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இணையதளத்தில் தங்களுக்கு வேலை நடக்க அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தவர்கள் அதன் விவரங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள 22,378 பேர் அந்த இணையதளத்தில் தாங்கள் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் அளித்த லஞ்சத் தொகை ரூ.57.61 கோடி ஆகும்.

இந்த இணையதளம் தொடங்கப்பட்ட கடந்த 2011ம் ஆண்டில் இருந்து இதுவரை லஞ்ச விவரங்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதில் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் தான் 3 ஆண்டுகளில் அதிகமாக ரூ.16 கோடி லஞ்சம் கொடுத்துள்ளனர்.

அதிகமாக லஞ்ச அளித்த நகரங்களில் பெங்களூரை அடுத்து சென்னை உள்ளது. சென்னையைச் சேர்ந்த 1,183 பேர் அந்த இணையதளத்தில் லஞ்ச விவரங்களை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் அரசு அதிகாரிகளுக்கு ரூ.7.08 கோடி லஞ்சம் கொடுத்துள்ளனர்.

நில ஆவணங்கள், தண்ணீர், மின் இணைப்பு, பாஸ்போர்ட் சரிபார்த்தல், கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெறுதல் ஆகியவற்றுக்காக மக்கள் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர்.

பெங்களூர், சென்னையை அடுத்து மும்பை (ரூ. 6.97 கோடி), டெல்லி (ரூ. 4.4 கோடி), ஹைதராபாத் (ரூ. 2.89 கோடி), கொல்கத்தா (ரூ. 1.63 கோடி) மற்றும் கொச்சி (ரூ. 56,101) ஆகிய நகரங்கள் உள்ளன.

இதுகுறித்து தயாரிப்பு மேலாளர் ஜோலிடா சால்டன்ஹா கூறுகையில், பெங்களூரில் உள்ளவர்களுக்கு எங்கள் இணையதளம் குறித்த விழிப்புணர்வு உள்ளதால் அதிகமானோர் தாங்கள் கொடுத்த லஞ்ச விவரங்களை தெரிவித்துள்ளனர்.

சென்னையிலும் எங்கள் இணையதளத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் எங்கள் இணையதளம் மூலம் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர் என்றும் தினமும் 20க்கும் மேற்பட்டோர் லஞ்ச விவரங்களை தெரிவித்து வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

மேலும் மக்கள் எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு ரூ.4 லட்சம் முதல் போக்குவரத்து பொலிசாருக்கு ரூ.20 லஞ்சம் கொடுத்தது வரை இணையதளத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த 107 பேர் தாங்கள் லஞ்சம் தர மறுத்ததாக தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.