தமிழ் மக்களைக் கொன்ற சிங்கள அரசு , தமிழையும் கொல்கிறது !

Written by vinni   // November 21, 2013   //

SL_protest_2‘தமில் சிங்கல முச்லிம் தென்சுரவ செயிய வெண்டாம்.’ ‘புலிக் கொசில் வ்ந்து போகும் மெக்கரோ, நீ சிறிலங்காவைத் தூண்டாடாதோ.’ – கொமன்வெல்த் மாநாட்டுக்காக இலங்கைக்கு வந்த சனல் 4 ஊடகக் குழுவினர் சென்ற இடங்களில் எல்லாம், தமிழைத் தப்பும் தவறுமாக எழுதிய அட்டைகளைப் பிடித்துதான் சிங்களர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.

இராணுவத்தைக்கொண்டு தமிழ் மக்களைக் கொன்ற சிங்கள அரசு, இப்போது சிங்களவர்களைக்கொண்டு தமிழைக் கொலை செய்கிறது!

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மற்றொரு சம்பிரதாய நிகழ்வாக, இலங்கையில் அரங்கேறி முடிந்திருக்கிறது கொமன்வெல்த் மாநாடு. ‘திட்டமிட்டபடி மாநாடு நடக்குமா… இந்தியா, அதில் பங்கேற்குமா?’ என்ற சர்ச்சைகளும் விவாதங்களும் நீடித்த நிலையில், இரு தரப்பினர்தான் மாநாட்டில் கவனம் ஈர்த்தனர்.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் குழுவினர் ஒரு தரப்பு! சனல் 4 குழுவினர் மற்றொரு தரப்பு. சிங்கள அரசாங்கம் குறிவைத்ததும் இந்த இரு தரப்பைத்தான்!

ஆவணப்பட இயக்குநர் கெலும் மக்ரே செல்லும் இடங்களில் எல்லாம், சிங்கள அரசுக் குழுக்கள் தப்புத் தப்பாக தமிழில் எழுதிய அட்டைகளை ஏந்தி நின்று, அவரை கொழும்புக்குத் துரத்துவதிலேயே குறியாக இருந்தன.

ஒருகட்டத்தில் கடுப்பான மக்ரே, ”’எங்கு வேண்டுமானாலும் சென்று செய்தி சேகரிக்கலாம்’ என்றுதானே விசா கொடுத்தார்கள். ஆனால், அவர்கள் எங்களை நகரவே விடவில்லை. இது என் இரகசியப் பயணம். ஆனால், என் வருகையை வெளிச்சமிட்டுக் காட்டி, என் ஊடகப் பணியை முடக்கியிருக்கிறது சிங்கள அரசாங்கம். கருத்துச் சுதந்திரமும் ஜனநாயகமும் கொமன்வெல்த்தின் அடிப்படைக் கோட்பாடுகள். ஆனால், அதற்குத் தலைவராக இருக்கும் ராஜபக்சவே அதைக் காற்றில் பறக்க விடுகிறார்!” என்று கொந்தளித்தார்.

இவருக்கு ஆக்ரோஷ எதிர்ப்பென்றால், இங்கிலாந்து பிரதமர் கமரூனைச் சுற்றி விசுவாசத் துதிபாடிகளைக் குவித்திருந்தது சிங்கள அரசாங்கம். ஆனால், கமரூனின் யாழ்ப்பாண நூலக வருகையின் போது, அரசாங்கக் கட்டுப்பாடுகளை மீறி ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு விட்டார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் வழக்கமான வேட்டி- சட்டையைத் துறந்து பளிச் கோட்-சூட்டில் கமரூனோடு நின்றபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். நம்புவீர்களா..? மிக சமீபத்தில் தாங்களே வாக்களித்துத் தேர்ந்தெடுத்த விக்னேஸ்வரனுக்கு எதிராக அப்போது கோஷங்களை எழுப்பினார்கள் ஈழத் தமிழர்கள்!

வெளிநாட்டுப் பிரதமர் ஒருவர், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதன்முறையாக வருகிறார் என்பதால், வலிகாமம், நல்லூர் போன்று சில இடங்களில் கமரூனின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மக்கள் போராட்டங்களை நடத்தினார்கள்.

வவுனியாவில் இருந்து கமரூன் குழுவினரிடம் மனு அளிக்க வந்திருந்த சாந்தினியிடம் பேசினேன். ”யுத்தம் முடிந்த இந்த நான்கு ஆண்டுகளில், இதுவரை ஏகப்பட்ட மனுக்களை பல்வேறு மனித உரிமை அமைப்புகளிடம் கொடுத்திருப்போம்.

நவி பிள்ளையிடம் கொடுத்தோம், சனல் 4 குழுவினரிடம் கொடுத்தோம். அவர்கள், மனுக்களைப் பெற்றுக்கொண்டு எங்களின் துயரங்களைக் காது கொடுத்தேனும் கேட்பார்கள்.

தவிரவும் இந்தியா ஒவ்வொரு முறையும் எங்களை ஏமாற்றுகிறது. கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் எங்கள் உறவுகளை விடுவிக்க, மேற்கத்தைய நாடுகள்கூட அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால், இந்தியா அதைத் தடுக்கிறது என்று எங்கள் மக்கள் குமுறுகிறார்கள்!” என்று உணர்ச்சி மேலிடப் பேசினார்.

வடக்குப் பகுதியில் மக்களோடும் தலைவர்களோடும் நேரத்தைச் செலவிட்ட கமரூன், தென் இலங்கையில் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் அறக்கட்டளையில் கிரிக்கெட் விளையாடினார். ‘பிரிட்டன் பிரதமரை சிலர் தவறாக வழிநடத்துவதாகவும், வடக்கில் வசந்தம் வந்துவிட்டதாகவும் கமரூனிடம் தெரிவித்தார் முரளிதரன்’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

உதயன் நாளிதழ் அதிபரும் கூட்டமைப்பு எம்.பி-யுமான சரவணபவன் நம்மிடம் பேசும்போது, ”எங்கள் அலுவகத்துக்கு வந்த கமரூன், எரிக்கப்பட்ட எங்கள் அச்சு இயந்திரங்களையும், கொல்லப்பட்ட ஊழியர்கள், தொடர்ச்சியாக நடைபெற்ற தாக்குதல்கள் பற்றிய விவரங்களையும் விரிவாகக் கேட்டறிந்தார். ஊடகங்களைச் சுதந்திரமாக இயக்க முடியாத சூழலை அவரிடம் சுட்டிக்காட்டினோம். எங்கள் பிரச்சினைகளைக் கேட்டவர், அதைக் கவனிப்பதாகக் கூறிச் சென்றார்.

இந்த மாநாடு, இந்தியாவின் மீது பெரிய சந்தேகங்களைக் கிளப்பிச் சென்றிருக்கிறது. எம்மக்களிடம் இந்தியா மீதான கோபம் அதிகரித்திருக்கிறது!” என்று உள்ளூர்வாசிகளின் கொந்தளிப்பான மனநிலையைப் பிரதிபலித்தார்.

53 நாடுகள் அங்கம் வகிக்கும் கொமன்வெல்த் கூட்டமைப்பின் 49 நாடுகளே, கொழும்பில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றன. அதிலும் 23 நாடுகளே மேல்நிலை பிரதிதிகளை அனுப்பிவைத்தன. ஏனைய நாடுகள், ஒப்புக்குச் சிலரைப் அனுப்பியதோடு அமைதியாகிவிட்டன.

இந்த மாநாட்டில் அதீதக் கவனத்தை ஈர்த்தது, மொரிஷியஸ் நாட்டின் புறக்கணிப்புதான். காரணம், 2015-ம் ஆண்டு வரை இலங்கைதான், கொமன்வெல்த் கூட்டமைப்பின் தலைமைத்துவ நாடு. அடுத்தபடியாக அந்தப் பொறுப்பை ஏற்க இருக்கும் நாடு மொரிஷியஸ். ஆனால், ‘இலங்கையில் மனித உரிமைகள் கவலை அளிக்கும் விதத்தில் இருப்பதால், இந்த மாநாட்டில் பங்கேற்க முடியாது’ என்று அறிவித்தது. அடுத்த மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்கக் கலந்துகொள்ளுமாறு கொமன்வெல்த் செயலர் விடுத்த அழைப்பையும் நிராகரித்தார் மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம் கூலம்.

சர்வதேச அரங்கில் சிங்கள அரசுக்கு எதிரான மூக்கறுப்பாக மொரிஷியஸின் திடமான நடவடிக்கையைக் குறிப்பிடுகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். ‘இன்னும் ஐந்து மாத காலத்துக்குள் உள்நாட்டு மனித உரிமை தொடர்பான நம்பத்தகுந்த உள்நாட்டு விசாரணை தேவை. நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில், மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. அமர்வில் இலங்கையில் சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுப்போம்!’ என்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் காலக்கெடுவை சடுதியில் நிராகரித்தது இலங்கை அரசாங்கம்.

‘இலங்கை மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஏனென்றால், நாங்களே சொந்தமாக விசாரிக்க ஆணைக் குழுவை அமைத்துள்ளோம். புலிகளை அழித்தேன். அவர்களின் 80 சதவிகிதக் கட்டமைப்பை மீட்டேன். இதையெல்லாம் செய்த என்னால், நம்பகமான விசாரணையை மட்டும் மேற்கொள்ள முடியாதா? எங்களுக்கு எவரும் கெடு விதிக்க முடியாது!’ என்று கமரூனுக்கு உடனே பதிலடி கொடுத்தார் ராஜபக்ச.

டேவிட் கமரூனின் அழுத்தம், மொரிஷியஸின் புறக்கணிப்பு, ஊடகங்களின் கூக்குரல் எல்லாம் நடந்தது காமன்வெல்த் அமைப்புக்கு வெளியில்தான். இலங்கைப் போரில் கொல்லப்பட்ட மக்கள் பற்றியோ, இப்போது எஞ்சியிருப்பவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றியோ காமன்வெல்த் அமைப்பினுள் யாரும் வாய் திறக்கவே இல்லை.

பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளின் கூட்டமைப்பான கொமன்வெல்த் அமைப்புக்கு ராஜபக்சவைத் தலைவராக்கி ஓய்ந்துவிட்டது கொழும்பு மாநாடு. இனி அடுத்தகட்ட காட்சிகள் மார்ச் மாதம் ஜெனீவாவில் அரங்கேறும். அதற்குள் உலகை இன்னொருமுறை அதிரச் செய்யும் ஆவணப்படம் ஒன்றை சனல் 4 தயாரித்திருக்கும்.

போருக்கு முன்னர் இலங்கைக்கு ஆயுதம் கொடுத்த அத்தனை நாடுகளும், இப்போது மனித உரிமை பாவனை காட்டுகிறது. ஆனால், இது எதையும் அறியாத ஈழ மக்கள், கைகளில் மனுக்களோடு அலைந்துகொண்டு இருக்கிறார்கள்… யாராவது வந்து தங்களின் துன்பங்களைத் தீர்க்க மாட்டார்களா என்று!


Similar posts

Comments are closed.