போர் குற்றம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் – டேவிட் கேமரூன்

Written by vinni   // November 21, 2013   //

david-cameron-inter_791872cஇலங்கை காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக கடுமையாக விமர்சித்து பேசினார்.

மேலும் இலங்கை இதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

இந்த நிலையில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டது பற்றி இங்கிலாந்து பாராளுமன்றத்தில் டேவிட் கேமரூன் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:–

காமன்வெல்த் மாநாட்டில் நான் கலந்து கொண்டது அந்த நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அமைந்தது. பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த உள்நாட்டு போரால் பாதிப்பை சந்தித்த மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களும் அமைதியாக வாழ வேண்டும்.

இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக அடுத்த மார்ச் மாதத்துக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் சர்வதேச தலையீட்டை அது சந்திக்க வேண்டியிருக்கும். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன.

காமன்வெல்த் கூட்டமைப்பில் பங்கேற்கும் நாடுகளில் நல்ல பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும். ஆனால் இலங்கையை பொறுத்தவரையில் அது மீறப்பட்டுள்ளது.

அங்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் பணியை செய்ய வேண்டிய கடமை இங்கிலாந்துக்கு உள்ளது. அவர்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நீதி நிலை நாட்டப்பட வேண்டும்.

சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு தமிழர்கள் வசிக்கும் வட பகுதிக்கு சென்ற முதல் வெளிநாட்டு தலைவர் நான் என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன். நான் அங்கு சென்றதன் மூலம் அங்குள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முன்னோட்டமாக இது அமையும்.

இறுதிகட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் சம்மந்தமாக உரிய விசாரணை நடத்த ஐ.நா. சபை மூலம் இலங்கைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். அங்கு நடந்த சம்பவங்கள் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் இலங்கை ராணுவம் நடத்தக்கூடிய விசாரணையை ஏற்றுக் கொள்ள முடியாது. சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இலங்கை பிரதமர் ராஜபக்சே தன்னிச்சைபடி முடிவெடுத்து கொள்ளட்டும். ஆனால் காமன்வெல்த் நாட்டின் உறுப்பினர் என்ற முறையில் அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். இதில் நல்ல முடிவை அவர் எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Similar posts

Comments are closed.