ஹாரிஸ் கோப்பை கிரிக்கெட்: மும்பை பள்ளி மாணவன் பிருத்வி ஷாவ் 546 ரன்கள் குவித்து புதிய சாதனை

Written by vinni   // November 20, 2013   //

2140685d-d8bf-423d-ae81-cf7d75816504_S_secvpfகிரிக்கெட் சாதனை மன்னன் சச்சின் தனது 200-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அடுத்த சச்சின் என்று வர்ணிக்கும் அளவுக்கு மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவன் பிருத்வி ஷாவ் புதிய சாதனை படைத்துள்ளான்.

16 வயதுக்குட்பட்டோருக்கான ஹாரிஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் எலைட் பிரிவில் இன்று ரிஸ்வி ஸ்பிரிங்பீல்டு அணியும், செயின்ட் பிரான்சிஸ் டி‘அசிசி அணியும் விளையாடி வருகின்றன. பள்ளிகளுக்கிடையிலான இந்தப் போட்டி மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சை ஆடி வரும் ரிஸ்வி ஸ்பிரிங்பீல்டு அணியின் பேட்ஸ்மேன் பிருத்வி ஷாவ், 2-ம் நாளான இன்று 546 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார். 330 பந்துகளில் 85 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் இந்த இலக்கை எட்டினார்.

இதற்கு முன் அர்மான் ஜாபர் இந்த ஆண்டு துவக்கத்தில் 473 ரன்கள் குவித்ததே ஹாரிஸ் ஷீல்டு போட்டியின் சாதனையாக இருந்தது.

அர்மான், முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் வாசிம் ஜாபரின் உறவினர் ஆவார். டிசம்பர் 2010ல் அவர் 14 வயதுக்குட்பட்டோருக்கான கில்ஸ் கோப்பை போட்டியில் சர்பராஸ் கானின் முந்தைய சாதனையை (430 ரன்) முறியடித்து 498 ரன்கள் விளாசினார்.

இதில் சிறப்பு என்னவென்றால், இளம் வயதில் ரன் மெஷினாக வலம் வரும் பிருத்வி ஷாவ், அர்மான் மற்றும் சர்பராஸ் ஆகிய மூவரும் ரிஸ்வி ஸ்பிரிங்பீல்டு பள்ளியின் மாணவர்கள்.

1988ம் ஆண்டு இதே மைதானத்தில் நடந்த ஹாரிஸ் கோப்பை போட்டியில், வினோத் காம்ப்ளி (349)-சச்சின் டெண்டுல்கர் (326) இருவரும் இணைந்து 664 ரன்கள் குவித்து அசத்தினர். இதனை நினைவுபடுத்தும் வகையில் பிருத்வி ஷாவின் அதிரடி ஆட்டம் அமைந்துள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.