இந்திய கால்பந்து வீரர்களில் அதிக கோல் அடித்து சுனில் சேத்ரி சாதனை

Written by vinni   // November 20, 2013   //

21812unilChhetriநேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் நேற்று நடைபெற்ற நட்புரீதியிலான சர்வதேச கால்பந்துப் போட்டி ஒன்றில் இந்தியா தன்னை எதிர்த்து விளையாடிய நேபாளத்தை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.

இதில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தன்னுடைய 43ஆவது கோலை அடித்து இந்திய வீரர்களிலேயே அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டத்தின் 21 ஆவது நிமிடத்தில் அவர் இந்த சாதனையைச் செய்தார்.

தன்னுடைய சாதனையை 29 வயதான சுனில் சேத்ரி முறியடித்ததை, இந்திய சாதனை வீரர் பைசங் பூட்டியா ஒரு பார்வையாளராகக் கவனித்துக் கொண்டிருந்தார். போட்டி முடிந்தவுடன் கீழே இறங்கிவந்த அவர் சுனில் சேத்ரியைத் தழுவி வாழ்த்தினார்.

இவர்கள் இருவரும் இந்தியக் கால்பந்து விளையாட்டினைப் பெருமைப்படுத்தியவர்கள் என்றே கூறலாம். கடந்த சில வருடங்களாக கால்பந்து விளையாட்டில் இந்திய அணியினர் தடுமாறிக் கொண்டிருந்தபோது பூட்டியா, சேத்ரி போன்ற இளைய தலைமுறை வீரர்கள் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள்.

சமீபத்தில் முடிந்த எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா நேபாளத்திடம் 1-2 என்ற கணக்கில் தோற்க நேரிட்டது. இப்போது பெற்ற வெற்றியின் மூலம் அந்தத் தோல்வியை சுனில் சேத்ரி சமன் செய்துள்ளார்.


Similar posts

Comments are closed.