அட்லாண்டிக் பெருங்கடலில் இலகுரக ஜெட் விமானம் விழுந்து விபத்து

Written by vinni   // November 20, 2013   //

airfrance_1418805cநேற்று மாலை அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லாடர்டேல் விமான நிலையத்திலிருந்து தனியார் இலகுரக ஜெட் விமானம் ஒன்று இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு பயணிகளுடனும் புறப்பட்டது.

மெக்சிகோவில் உள்ள கோசுமெல் நகரத்தை நோக்கி பறக்கத் தொடங்கிய அந்த விமானம் கிளம்பிய சிறிது நேரத்திற்குள்ளாகவே அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்தத் தகவலை அந்நாட்டின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் காத்லீன் பெர்கன் இணையதள செய்தியில் தெரிவித்தார். கரையிலிருந்து நான்கு மைல் தொலைவில் விமானம் விழுந்ததாக முதலில் கூறிய காத்லீன் முழு விபரமும் பின்னரே தெரியவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மியாமியில் உள்ள கடலோரக் காவல் படையினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக இரண்டு கப்பல்களையும், கடலோர விமானதளத்திலிருந்து ஒரு ஹெலிகாப்டரையும் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தது.

விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து இன்னும் சரிவரத் தெரியவில்லை. விமானத்தில் சென்றவர்களின் அடையாளங்களோ, விமானம் கிளம்பிய சூழ்நிலையோ வெளியிடப்படவில்லை.


Similar posts

Comments are closed.