பிரிட்டிஷ் பிரதமர் விடுத்த எச்சரிக்கையை நாம் வரவேற்கின்றோம்: – சம்பந்தன்

Written by vinni   // November 19, 2013   //

r.sampanthanஇலங்கை அரசு இழைத்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும். இதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமேயில்லை என்பது தொடர்பில் இலங்கை அரசுக்குப் பிரிட்டிஷ் பிரதமர் விடுத்த எச்சரிக்கையை நாம் வரவேற்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரு மான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்ற போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசு சுயாதீன மான விசாரணையை நடத்தாவிட்டால், சர்வதேச விசாரணையை நடத்துமாறு ஐ.நா விடம் பிரிட்டன் கோரிக்கை விடுக்கும் என்று பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பில் வைத்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றி அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பிரிட்டிஷ் பிரதமர், இலங்கை அரசுக்கு காலக்கெடுவையும் விடுத்துள்ளார். இதனைக் கூட்டமைப்பு வரவேற்கின்றது. இலங்கை அரசு சர்வதேச சட்டங்களை மீறிச் செயற்பட்டுள்ளது என்பது உலகறிந்த விடயம். இதை இலங்கை அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. இலங்கை அரசின் இந்தச் செயல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இரண்டு தீர்மானங்களை சர்வதேச நாடுகள் நிறைவேற்றியுள்ளன.

ஆனால், உள்நாட்டில் இது தொடர்பில் நம்பகரமான சுயாதீனமான விசாரணையை எதனையும் இலங்கை அரசு இதுவரை நடத்தவில்லை. இந்நிலையில், சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசு முகம் கொடுக்க வேண்டி வந்துள்ளது. இந்த விசாரணை நடைபெற்றே தீரவேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமேயில்லை என்றார் அவர்.


Similar posts

Comments are closed.