வலி.வடக்கு பிரதேசம் விரைவில் விடுவிக்கப்படும்!- பிரிட்டிஷ் பிரதமருக்கு புதுக்கதை விட்ட யாழ்.அரச அதிபர்

Written by vinni   // November 19, 2013   //

camron-ga2வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் விரைவில் அவர்களது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனிடம் யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உறுதிபடத் தெரிவித்தார்.
யாழ்.வந்த பிரித்தானியப் பிரதமர் சுன்னாத்தில் அமைந்துள்ள சபாபதிப்பிள்ளை முகாமில் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது அவருடன் யாழ்.அரச அதிபரும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது தங்களது நிலங்கள் அரசாங்கத்தினால் இராணுவத் தேவைகளுக்காக பறிக்கப்படுவதாக மக்கள் பிரித்தானியப் பிரதமரிடம் தெரிவித்து தங்களது நிலங்களை மீட்டுத் தரக் கோரினார்கள்.

இதன்போது உடன் இருந்த அரச அதிபரிடம் பிரதமர் இது தொடர்பாக வினவினார். இதற்கு பதிலளிக்கும் போதே பிரித்தானியப் பிரதமரிடம் யாழ்.அரச அதிபர் இந்த புதுக்கதையினை அவிழ்த்து விட்டார்.

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த காணிகளில் மீளக்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

அண்மையில் கூட சில இடங்கள் மக்கள் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டது. அதேபோல் ஏனைய இடங்களும் விடுவிக்கப்பட்டு இந்த மக்களுக்கும் அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக அவர் பிரித்தானியப் பிரதமரிடம் குறிப்பிட்டார்.

வலி.வடக்கு மக்களின் காணிகளை அரசாங்கம் கட்டாயமாக சுவீகரிக்கும் என்று அறிவித்துள்ள நிலையில் அரசாங்க அதிபர் மிகக் கேவலமாக முறையில் மனச்சாட்சி இன்றி இவ்வாறு நடந்து கொண்டதாக வலி.வடக்கு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

இதேவேளை இந்த சபாபதிபிள்ளை முகாமில் நல்ல வீடுகள் உள்ள நிலையில் ஏன்? குறைபாடுள்ள வீடுகளை மட்டும் பிரித்தானியப் பிரதமரிற்கு காட்டுகின்றீர்கள் என்று உடுவில் பிரதேச செயலாளர் என்.நந்தகோபாலன் மக்களை எச்சரித்தார்.

முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நீர் மற்றும் சுகாதார வசதிகள் யாவும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.அரச அதிபருக்கு அருகில் நின்று பிரதேச செயலாளர் பிரித்தானிய் பிரதமரிடம் சுட்டிக்காட்டி, அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயத்திடம் நல்ல பெயர் எடுத்துக் கொண்டார்.

 


Similar posts

Comments are closed.