மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்தே ஆகவேண்டும் : ஐக்கிய நாடுகள் சபையின் பொறியில் இருந்து தப்பிக்கவே முடியாது – ஐக்கிய தேசியக் கட்சி

Written by vinni   // November 18, 2013   //

mangala-samaravira2014 மார்ச் மாதத்திற்குள் மனித உரிமை மீறல் குறித்து இலங்கை அரசு நம்பகத்தன்மையுடைய உள்ளக விசாரணையை மேற்கொள்ளாவிடின் ஐக்கிய நாடுகள் சபையின் பொறியில் இருந்து தப்பவே முடியாது” என  எச்சரிக்கை விடுத்தது.

பொதுநலவாய மாநாட்டிற்காக வருகை தந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன், 2014 மார்ச் மாதத்துக்குள் மனித உரிமை மீறல் குறித்து இலங்கை கவனம் செலுத்தாவிடின் ஐக்கிய நாடுகள் சபையிடம் சர்வதேச விசாரணை வலியுறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.   அவர் மேலும் தெரிவித்ததாவது,   பிரிட்டிஷ் பிரதமர் கூறுவதை இலங்கை அரசு மறுத்துள்ளது.

இப்படியான குற்றச்சாட்டுகளை மறுக்கும் முன் இதுசம்பந்தமாக ஆராய்வதே சிறந்ததாகும். ஆனால், அரசு இவற்றைக் கவனத்தில் எடுக்காது சர்வதேசத்தை ஏமாற்றுவதையே தனது வழமையாக கொண்டிருக்கிறது.

பிரதமர் கமரூன் கூறியதைப் போன்று சுயாதீன விசாரணை வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியாகிய நாமும் பலமுறை அரசிடம் கோரிக்கை விடுத்தும், அரசு இதுகுறித்து சிறிதும் அலட்டிக்கொள்ளவில்லை.    காரணம் இங்கு சர்வாதிகார ஆட்சியே நிலவி வருகிறது.

நாம் ஏற்கனவே கூறியதைப் போன்று நம்பகத்தன்மை மிக்க உள்ளக விசாரணையை அரசு செய்திருக்குமானால் எந்த நாடும் சரி அரச தலைவர்களும் சரி இப்படி எச்சரிக்கை விடுத்திருக்கமாட்டார்கள். நம் நாடு விடயத்தில் மூக்கையும் நுழைத்திருக்க மாட்டார்கள்.

அத்தோடு, இந்த பொதுநலவாய மாநாடும் அரசுக்கு பெரிய அடியாகவே அமைந்துள்ளது. உறுப்பு நாடுகள் 53 இருந்தும் பெறும் 21 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்களே இதில் பங்குபற்றினர். அதுவும் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே இவர்களின் வருகை இருந்தது.

எது எப்படியிருப்பினும், அரசு இங்கு அர‌ங்கேறிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்தே ஆகவேண்டும். இல்லையேல் ஐக்கிய நாடுகள் சபையின் பொறியில் இருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது – பதில் கூறியே ஆகவேண்டும் என்றார்.


Similar posts

Comments are closed.