நிறைவடைந்தது பொதுநலவாய மாநாடு : “கொழும்பு பிரகடனம்’ வெளியிடப்பட்டது

Written by vinni   // November 18, 2013   //

commanஇலங்கையில் நிகழ்ந்த பொதுநலவாயத் தலைவர்களின் மாநாட்டில் நேற்று “கொழும்பு பிரகடனம்’ வெளியிடப்பட்டது. நிரந்தரமான – சமத்துவமான அபிவிருத்தி இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வறுமை, உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாறுபாட்டைத் தணித்தல், வர்த்தகத்தில் நிலவும் பற்றாக்குறை, உறுதிப்படுத்தப்படும் போதிய நிதிகள், முதலீடு, அறிவு, தொழில் நுட்பப் பரிவர்த்தனை, உலக ரீதியிலான பொருளாதார – வர்த்தக முறைமையை சமத்துவமாக உயர்த்துதல் ஆகியவற்றுக்கு உதவும் பொருட்டு உலக ரீதியிலான கொள்கைகளை மேம்படுத்துவதற்கான பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வர் என இப்பிரகடனத்தில் பொதுநலவாயத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

உலக நிதி நிலைமை, பொருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றின் தாக்கம், குறிப்பாக வளர்முக நாடுகளின் அபிவிருத்திப் பணிகளைப் பாதிக்கின்றது என்பது குறித்தும் இதில் ஆழ்ந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.   உலக பொருளாதா ரத்துக்கு எதிரான சவால்களை முறியடித்து, சமப்பாட்டைத் தோற்றுவிக்க காத்திரமாகப் பணிபுரிய வேண்டுமென்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

முழுமையானதும், பயனுள்ளதுமான தொழில் முறைமையோடு நிரந்தரமானதும், சமத்துவமானதுமான உலக வளர்ச்சிக்குப் பணியாற்றவேண்டும் என்றும் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.   வளர்முக நாடுகளுக்கான நேர்மையான பிரதிநிதித்துவத்தை உத்தரவாதப்படுத்தும் பொருட்டு சர்வதேச வர்த்தகம், நிதியம், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றை மறுசீரமைக்க வேண்டியது மிக முக்கியமான அம்சமாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

சர்வதேச, தேசிய மட்டங்களில் அதிகரித்துவரும் சமத்துவமின்மை, உறுப்பு நாடுகளின் வறுமை ஒழிப்பு குறைப்புக்கும் எதிர்கால சாத்தியமான வளர்ச்சிக்கும் குந்தகமாகவுள்ளது.    இயற்கை, மனிதர் உருவாக்கும் பேரிடர்கள் மற்றும் உலக சவால்களின் அழுத்தங்கள் ஆகியவற்றால் நாடுகள் மோசமாகப் பாதிப்படைகின்றன.

இந்த நிலைப்பாடு சமூகங்களுக்கிடையிலும், நாடுகளுக்கிடையிலும் பொருளாதார இடைவெளிக்கு வழிகோலுகிறது.    ஆகவே, சமத்துவ வளர்ச்சியை எட்டுவதற்கும் 2012 டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட சாசனத்தைக் கடைப்பிடிப்பதற்கும் முன்னுரிமை வழங்குகின்றோம் – என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.