ரஷ்யாவில் பெண் தீவிரவாதியின் கணவர் உட்பட ஐவர் சுட்டுக்கொலை

Written by vinni   // November 17, 2013   //

america_russia_001.w245தெற்கு ரஷ்யாவின் காகாசஸ் மாகாணத்தின் வழியே கடந்த மாதம் சென்ற பயணிகள் பஸ் மீது தற்கொலைப் படை பெண் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.
ஒரு நிறுத்தத்தில் அந்த பஸ் நின்றபோது பஸ்சினுள் ஒரு பெண் ஏறினாள். அடுத்த சில நிமிடங்களில் மரங்கள் அடர்ந்த சாலையில் பஸ் சென்றபோது அவளது உடல் வெடித்து சிதறியதும், பயணிகள் பலர் தூக்கி வீசப்பட்டதையும் டிரைவர் சீட் அருகேயுள்ள சி.சி.டி.வி. கேமரா படம் பிடித்துள்ளது.

இந்த தாக்குதலில் 32 பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்தியது நய்டா அசியலோவா(30) என்றும், டகேஸ்தான் பகுதியை சேர்ந்தவள் என்பதும் தெரிய வந்தது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் காகாசஸ் மாகாணத்திற்கு அருகே அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் பந்தயங்களை நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் நிகழ்ந்த இந்த தற்கொலைப் படை தாக்குதல் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

முஸ்லிம்களுக்கென்று தனிநாடு வேண்டும் என்று போராடி வரும் குழுவினர் 2002-ம் ஆண்டு திரையரங்கம் மீது நடத்திய தாக்குதலில் 130 பேரும், 2010ம் ஆண்டு மாஸ்கோ விமான நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலில் 35 பேரும் பலியானது நினைவிருக்கலாம்.

நய்டா அசியலோவை அவரது கணவர் தான் தற்கொலைப் படை தீவிரவாதியாக மாற்றி பஸ் மீதான இந்த தாக்குதலுக்கு தயார்படுத்தியதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

வெடி குண்டு நிபுணரான 22 வயது ட்மிரிட்டி சோகோலோவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நய்டா அசியலோவா கணவனால் மூளைச் சலவை செய்யப்பட்ட பின்னர் தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு அந்த பஸ்சை வெடிக்க வைத்ததாக அந்த செய்திகள் தெரிவித்தன.

இந்த தாக்குதலுக்காக மனைவியின் இடுப்பில் வெடிகுண்டு பெல்ட்டை கட்டி பலமுறை ட்மிரிட்டி சோகோலோவ் ஒத்திகை பார்த்த தகவலும் தெரியவந்துள்ளது.

ரஷ்யாவின் தீவிரவாத தடுப்பு பொலிஸார் ட்மிரிட்டி சோகோலோவ்-வை வலை வீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், டகேஸ்தான் தலைநகர் மக்கச்காலா அருகேயுள்ள கிராமத்தில் அவன் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அந்த வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்தபோது உள்ளே இருந்த சிலர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.

பொலிஸார் நடத்திய எதிர் தாக்குதலில் ட்மிரிட்டி சோகோலோவ் உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


Similar posts

Comments are closed.